ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்கும் முயற்சியில் அரசாங்கம் – சஜித்
ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்கும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டுவருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
ஹம்பாந்தோட்டையில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்க வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்படுகின்ற போதிலும் மக்கள் எதிர்பார்க்கும் ஜனாதிபதித் தேர்தலுக்கும் பொதுத் தேர்தலுக்கும் பின்னரே அதனை இல்லாதொழிக்க வேண்டும்.
புதிய மக்கள் ஆணையின் மூலமே அது இடம்பெற வேண்டும்.
இந்த வருட இறுதியில் நடைபெறவுள்ள தேர்தலில் ஜனாதிபதி மக்கள் ஆணையை பெற முடியாது என்பதனாலேயே குறித்த தேர்தலை ஆளுந்தரப்பு இரத்துச் செய்ய எத்தணிக்கிறது.
இதனாலேயே அரசாங்கம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையில் திருத்தங்களை கொண்டு வர முயற்சித்து வருகின்றது.
உண்மையான அபிலாஷையுடன் இந்த நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையில் திருத்தங்களை கொண்டு வர முயற்சித்தால் நாமும் அதற்கு ஆதரவு வழங்குவோம்.
எனவே, இங்கு அவ்வாறான உண்மையான நோக்கம் இல்லை எனவும், தேர்தலை ஒத்திவைக்கும் மறைமுகமான நோக்கம் உள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றஞ்சாட்டியுள்ளார்.
நாட்டில் அரசாங்கம் வேறாக செயற்படும் போது ஜனாதிபதி தமது சொந்த நிகழ்ச்சி நிரலுக்கு அமையவே செயற்பட்டு வருவதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச குற்றஞ்சுமத்தியுள்ளார்.