சிட்னியில் தமிழும் சைவமும் செழிக்க சமூகப் பணியாற்றிய வேலுப்பிள்ளை ஐயா !

சிட்னியில் தமிழும் சைவமும் செழிக்க சமூகப் பணியாற்றிய வேலுப்பிள்ளை ஐயா !

– ஐங்கரன் விக்கினேஸ்வரா

(சிட்னியில் தமிழும் சைவமும் மேலோங்கி வளர, பெருந் தொண்டு ஆற்றிய மூத்த சமூக சேவையாளரான செல்லையா வேலுப்பிள்ளை நேற்று ஜூலை 15ம் திகதி சிட்னியில் காலமானார்)

சைவமும் தமிழும் எங்கள் கண்கள் மட்டுமல்ல அடையாளமும் தான். தமிழருக்கே அடையாளம் தந்த எங்கள் சைவ நெறியின் மேன்மையை புலம் பெயர் மண்ணில் காத்து வளர்த்திட்ட பெருமையில் சிட்னியில் முதன்மையானவர் ஐயா வேலுப்பிள்ளை அவர்கள்.

தமிழும் சைவமும் கண்ணென வாழ்ந்த மறைந்த வேலுப்பிள்ளை ஐயா முல்லைத்தீவு மண்ணை பிறப்பிடமாக கொண்டவர். ஆரம்பக்கல்வியை மன்னார் எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரியில் பயின்றார். பின்னர் அவர் உயர்தர கல்வியை யாழ். பரமேஷ்வரா கல்லூரியில் கற்றார்.

சிட்னி தமிழுக்கும் சைவத்துக்கும் ஆற்றிய அளப்பரிய பணியாற்றிய மறைந்த வேலுப்பிள்ளை ஐயா கடந்த பல வருடங்களாக சைவர்களின் இறுதிக் கிரியைகளை நடாத்துவதில் சேவை மனப்பான்மையுடன் தொண்டு ஆற்றிய பெருமைக்கும் உரியவர்.

தமிழ் மண் பெற்ற சிறந்த சேவையாளனான செல்லையா வேலுப்பிள்ளை சிட்னியில் சைவமன்றக் காவலராக, ரசனை மிகு கலைஞராக , பழந்தமிழ் இலக்கிய வாசகராக விளங்கியவர். தமிழுக்கும், சிட்னி தமிழ் சமுகத்திற்கும் ஆற்றிய அளப்பரிய பணிக்கு எமது சமுகம் என்றும் கடமைப்பட்டிருக்கிறது.அவர் ஆற்றிய உயரிய சேவைகளால் , எம்மவர் மனங்களில் என்றும் வாழ்வார்.

தமிழ் மக்கள் செறிந்து வாழும் கம்பர்லாந் (Cumberland) தமிழ்ச்சங்கத்தை உருவாக்க வித்திட்டவர்களில் இவரும் ஒருவராவர். வேலுப்பிள்ளை ஐயா என்றும் தமிழ் மக்கள் மனதில் நிற்பார் என்பதில் சந்தேகமில்லை. முதுமை அவரை வாட்டினாலும், பல உபாதைகளால் சிரமபட்டாலும் கோயில் தரிசனம் பெறத் தவறியதில்லை.

அத்துடன் அவுஸ்திரேலியாவில் கோயில்கள், தமிழ்ப் பாடசாலைகள், தமிழ் அமைப்புகள்கள் நடாத்தும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் அவரின் புன்முறுவல் பூத்த முகத்தினை என்றும் காணலாம். அவுஸ்திரேலியா மண்ணில்

நீண்ட காலம் சமூகப்பணியாற்றிய அவரின் மறைவு பேரிழப்பாகும். சிட்னி சைவர்களுக்கு ஆற்றிய தொண்டு அளப்பரியதும் அளவிடமுடியாததாகும்.

சிட்னியின் மூத்த குடிமகனான வேலுப்பிள்ளை ஐயா பல வருடங்களாக மறைந்த “வானொலி மகேசன் மாமா” உடன் இணைந்து இறந்த சைவர்களுக்கு இறுதிச் சடங்குகளைச் செய்து சமூக தொண்டாற்றினார்.

அத்துடன் தமிழ் மூத்த குடிமக்கள் சங்கங்களில் ஈடுபட்டு சேவையாற்றினார். தனது கணீரென்ற குரலில் தேவாரம், புராணம் பாடல்களைப் பாடுவதில் வல்லமை பெற்றிருந்தார். சிட்னி முருகன் கோயிலில் தொண்டனாக நீண்ட காலம் பணியாற்றினார்.

தற்பெருமை இல்லா சமுக தொண்டனாக, எங்கள் சமூகத்துக்கு மகத்தான சேவை புரிந்தவர். அவரின் மறைவு சிட்னி தமிழ் சமூகத்துக்கு பெரும் இழப்பாகும். எப்பொழுதும் நல் மதிப்பும், அன்பும் பாராட்டும் அன்பிற்குரிய வேலுபபிள்ளை ஐயா சிட்னி வாழ் தமிழ் மக்களால் எப்போதும் நினைவு கூறப்படுவார்.

– ஐங்கரன் விக்கினேஸ்வரா

CATEGORIES
Share This