இஸ்லாமிய பயங்கரவாதம்: வார்த்தையை நீக்க வேண்டும் – முன்வைக்கப்பட்ட கோரிக்கை

இஸ்லாமிய பயங்கரவாதம்: வார்த்தையை நீக்க வேண்டும் – முன்வைக்கப்பட்ட கோரிக்கை

மதத்தின் பெயரிலான பயங்கரவாதம் பற்றி பேசும் போது, நாடாளுமன்றத்தில் முஸ்லிம், இஸ்லாமிய பயங்கரவாதம் என்ற வார்த்தைகளை பயன்படுத்துவதை முதலில் நீக்க வேண்டும் என திகாமடுல்ல மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் பிரதிநிதி ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றிய, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். எம். எம். முஷாரப், நாடாளுமன்றத்தில் இந்த வார்த்தை அதிகமாக பயன்படுத்தப்பட்டதை தான் அவதானித்ததாக கூறினார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை முன்னிலைப்படுத்தி முஸ்லிம் பயங்கரவாதம் பற்றி பேசும் எவரும் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளை கட்டவிழ்த்து விடப்படுவதை சிங்கள பயங்கரவாதம் என ஏன் கூறுவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் கேள்வி எழுப்பினார்.

“மதத்தின் பெயரால் பயங்கரவாதம் பற்றி பேசப்படும் போதெல்லாம், நாடாளுமன்றத்தில் பேசும் பெரும்பாலானவர்கள் முஸ்லிம் பயங்கரவாதத்தைப் பற்றி அதிகம் பேசுவதை நான் அவதானித்தேன்.

முதலில் இந்த நாடாளுமன்றம் போன்ற உயரிய சபைகளில் இருந்து இஸ்லாமிய பயங்கரவாதம், முஸ்லிம் பயங்கரவாதம் என்ற வார்த்தைகளை நீக்க வேண்டும்.”

முஸ்லிம் பயங்கரவாதம் என்ற சொல்லுக்கு எதிராக அமைதி வழியில் போராடி வருவதாக கூறும் மக்கள் பிரதிநிதி, உலக நாடுகள் முஸ்லிம் பயங்கரவாதம் என்ற வார்த்தையை தமது அரசியல் நலன்களுக்காக பயன்படுத்தி இஸ்லாத்திற்கு எதிராக செயற்படுவதாகவும், முஸ்லிம்கள் பயங்கரவாதிகள் அல்ல எனவும் வலியுறுத்தினார்.

“இன்று பயங்கரவாதம் என்பது ஒரு சதி. இன்று முஸ்லிம் பயங்கரவாதம் என்ற சொல்லுக்கு எதிராக நாங்கள் இப்போது அறவழி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இரண்டாம் உலக மகா யுத்தம் வரை இந்த உலகத்தில் முஸ்லிம்கள் பயங்கரவாதிகளாக இல்லை.

யூதர்களை பலஸ்தீனத்தில் குடியேற்றிவிட்டு அவர்களுக்கான ஒரு புகலிடத்தை வழங்கும்போது, அங்கு பலஸ்தீன முஸ்லிம்கள் தடையாக இருக்கின்றார்கள் என்ற காரணத்திற்காக உலகத்திலே முஸ்லிம்களை பயங்கரவாதிகளாக சித்தரிப்பதன் ஊடாகவே பஸ்தீனத்தை சின்னாபின்னமாக்கலாம் என்கிற ஒரு அரசியல் சதியில்தான் இந்த இஸ்லாமிய போபியா என்ற ஒன்று உருவாகிறது.

அதன் பின்னர் எல்லா நாடுகளிலும் அவர்களுக்கு அரசியல் ரீதியாக ஒன்றை செய்வதானால் இன்று இஸ்லாமிய போபியாவை பயன்படுத்தி முஸ்லிம் பயங்கரவாதம் என்று சொல்லை பயன்படுத்தி அவர்கள் இஸ்லாதிற்கு எதிராக நடந்துகொள்கிறார்களேத் தவிர முஸ்லிம்கள் பயங்கரவாதிகள் அல்ல.”

21 ஏப்ரல் 2019 அன்று இலங்கையில் நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களின் பின்னணியில் தேசிய, சர்வதேச மற்றும் அரசியல் சதி இருப்பதாக பல ஆய்வுகள் வெளிப்படுத்துவதாக அவர் குறிப்பிடுகின்றார்.

“எனவே ஈஸ்டர் தாக்குதலை முதன்மைப்படுத்தி முஸ்லிம் பயங்கரவாதம் என பேசுவோம்.
இன்று ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி யார் என்ற ஆய்வில் முஸ்லிம்கள் பிரதான சூத்திரதாரி அல்லவென்பதை அனைத்து அறிக்கைகளும் சொல்கின்றன. இதற்குப் பின்னால் ஒருவர் இருக்கின்றார்.

அரசியல் சதி இருக்கின்றது. தேசிய சதி இருக்கிறது, சர்வதேச சதி இருக்கின்றது என பல ஆய்வுகள் சொல்கின்றன. நாங்களும் கூறுகின்ற விடயம் அதுதான்.

முஸ்லிம்களை பயன்படுத்தி இந்த நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. உலகம் முழுவதும் எவ்வாறு முஸ்லிம்கள் பயன்படுத்தப்படுகின்றார்களோ அவ்வாறு சில குழுக்கள் பயன்படுத்தப்பட்டன.”

இலங்கையில் முஸ்லிம்களை இலக்கு வைத்து சிங்கள மக்களால் நடத்தப்பட்ட வன்முறைச் செயல்களை சிங்களப் பயங்கரவாதமாக குறிப்பிட முடியுமா? என நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ். எம். எம். முஷாரப் மதத்தின் பெயரிலான பயங்கரவாதத்தை முற்றிலுமாக ஒழிக்க நாடாளுமன்றத்தில் பல நல்ல சட்டங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

“நாம் பொதுவாக கேட்கின்றோம். திகனயிலே, அளுக்கமவிலே, அம்பாறையிலே முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக இடம்பெற்ற அந்த ஆர்ப்பாட்டங்களில் நாம் எவராவது இதுவொரு சிங்கள பயங்கரவாதம் என பேசியிருகின்றோமா? எனவே முஸ்லிம்களை மாத்திரம் நாம் முஸ்லிம் பயங்கரவாதம், இஸ்லாமிய பயங்கரவாதம் என பேசுவதை முதலில் நிறுத்திவிட்டு, இந்த மதத்தின் பெயரிலான பயங்கரவாதத்தை முற்றாக ஒழித்துக்கட்டுவதற்காக நல்ல பல சட்டங்கள் இங்கு கொண்டுவரப்பட வேண்டும்.”

CATEGORIES
Share This