யாழ். முற்றவெளி குழப்பத்துக்கு யார் காரணம் ?
பிரபல பாடகர் ஹரிஹரன் மற்றும் தென்னிந்திய சினிமா பிரபலங்கள் பங்கு பற்றிய நிகழ்ச்சியில் குழப்பங்களை விளைவித்த ஒவ்வொருவரும் பொறுப்புக் கூற வேண்டும்.
கொழும்பில் இருந்தபோது மே தின நிகழ்வுக்கு காலிமுகத்திடலில் இவ்வாறான பல நிகழ்வுகள் இடம்பெற்றன. அவற்றில் ஒன்றில் கூட இவ்வாறான குழப்பங்கள் இடம்பெறவில்லை. தள்ளு முல்லு கூட இருக்காது. காவல் துறையினர் கூட பெரியளவில் இருக்கமாடடார்கள்.
அண்மையில் அனிருத்தின் நிகழ்வு பிரித்தானியாவில் ஏறத்தாழ இரண்டு மணித்தியாலங்கள்
கடும் குளிரில் மண்டபத்துக்குள் நுழைய காத்திருக்க வேண்டியிருந்தது. முதியவர்கள், சிறுவர்கள் பெண்கள் என எல்லோரும் வரிசையாக காத்திருந்ததை அவதானிக்க முடிந்தது. உள்ளே செல்லும்போது நிகழ்ச்சி ஆரம்பமாகி விட்டது.
யாழ். முற்றவளி நிகழ்வில் ஒருவர் கூட வரிசையில் நின்று உள்நுழைய முனையவில்லை. மாறாக நான் முந்தி நீ முந்தி என தள்ளுபட்டுக்கொண்டிருந்தனர்.
ஒரு பஸ் தரிப்பு நிலையத்தில் கூட மக்கள் வந்த ஒழுங்கில் வரிசையில் நின்று தான் ஏறுவார்கள். பஸ் வந்ததும் நின்ற ஒழுங்கில் ஏறுவார்கள்.
புகையிரத நிலையத்திலும் மற்றவர்கள் இறங்கும் வரை ஏறுபவர்கள் காத்திருப்பார்கள் . இதனை யாரும் மக்களுக்கு கற்றுக் கொடுப்பதில்லை . அவர்கள் தாமாகவே முன்வந்து செய்கிறார்கள் . இது ஒரு நன்னடத்தை. நாம் நன்றாக நடக்காமல் எல்லா பொறுப்பையும் ஒருங்கமைப்பாளர்கள் மீது தூக்கி போட்டுவிட்டு நம் தவறை மறைப்பது சரியா?
பலர் காயம், பொருட்கள் சேதம் இதனை செய்தது ஒருங்கமைப்பாளர்கள் இல்லை ? அவர்களின் ஒருங்கமைப்பில் பல தவறுகள் இருந்தன. அவர்கள் காலில் விழுகின்றோம் அமைதியாக செல்லுங்கள் என பல தடவைகள் கேட்டார்கள். பலர் மது போதையில்
இருந்தாரக்ள், தலைக்கவசங்களுடன் உள் நழைந்தார்கள். இந்த நிகழ்வை குழப்பினால்
எதிர்வரும் காலங்களில் இவ்வாறான நிகழ்வு நடக்காது என நன்கு திட்டமிடப்பட்டு குழப்பம்
விளைவிக்கப்பட்டுள்ளது என்பதற்கு முற்றவெளி மயானம் போன்று காட்சி அளிப்பதே ஒரு சான்று.
பாஸ்கரன், சுபாஷ்கரன் , இந்திரன் போன்ற தமிழ் முதலாளிமார் வளர்ச்ச்சியை சகிக்க முடியாத தமிழர்கள் பலர் உள்ளனர் . அவர்கள் வெளிநாடுகளில் பல முதலீடுகள் செய்து வசதியாக உள்ளனர். எம் மண்ணின் மீது கொண்ட ஈர்ப்பு காரணமாக யாழில் சில முதலீடுகளை செய்கின்றனர் . இதனால் எமது பொருளாதாரம் வளர்கின்றது. பலருக்கு தொழில் வாய்ப்பு கிடைக்கின்றது. இதனை நாம் ஆதரிக்க வேண்டும் இல்லையேல் ஒதுங்கி இருக்க வேண்டும்.
வெளிநாடுகளிலும் கடைகள் திறப்பு விழாக்களுக்கு நடிகர்களை அழைப்பது வழமை. இந்திரனின் தனிப்பட்ட விருப்பம் இப்படியொரு நிகழ்வை யாழில் நடத்தி முடிக்க வேண்டும். காசு கொடுத்து போவதை மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும். 4500 பேர் மட்டுமே பணம் செலுத்தி பார்த்தார்கள். மீதி 50,000 பேரும் இலவசமாகத்தான் பார்த்தனர். இது அவரின் பெரும் தன்மை. கில்மிஷாவை இந்திய மக்கள் எப்படி மதிப்பளித்து வெற்றிபெற செய்தனர் என்பதை நாம் உணர வேண்டும். கலைஞர்களை மதிக்க நாம் கற்றுகொள்வேண்டும். சிலர் கூத்தாடிகள் என்றனர் அப்படியாயின் யாழில் ஏன் இத்தனை திரையரங்குகள்?
சினிமா ஒரு ஊடகம். அது அவர்களின் தொழில். நாம் அழைக்கும்போது அவர்கள் விரும்பினால்
வருவார்கள் அது அவர்களது விருப்பம். பலர் விரும்பவில்லை காரணம் பாதுகாப்பின்மை .
இப்போது வராத நடிகர்களுக்கு புரிந்திருக்கும் தம் முடிவு சரியென. சினிமாவால் கலாசாரம்
சீரழிகிறது என்றால் முதலில் யாழ். திரையரங்குகளை மூட வேண்டும். இந்த குழப்பத்தால் யாழ். மக்கள் ஒவ்வொருவருக்கும் இழுக்கு. உங்களுக்கு பிடிக்கவிடட்டால் நிகழ்ச்சியை புறக்கணியுங்கள்.
வன்முறையில் ஈடுபடாதீர்கள். இது எங்களுக்கு தான் பாதிப்பு. Youtubers நிகழ்வுகளை பதிவு செய்கின்றனர் அது தவறல்ல ஆனால் அவர்கள் போடும் தலையங்கத்தை ஒருமுறை யோசித்து விட்டு போட வேண்டும்.
Meet and greet பொதுவானது. உங்களிடம் பணம் இருந்தால் செல்லுங்கள் 30,000 ரூபா என கேள்வியெழுப்ப வேண்டாம் . ஒரு பேச்சுக்கு 100 ரூபா என்றால் அந்த நடிகையின் நிலைமை என்னவாகும் என்பதை சிந்தியுங்கள் . தமன்னா விமான நிலையத்தில் பேட்டி தர வேண்டிய அவசியம் இல்லை. அது அவரின் தனிப்படட விருப்பம். யாழில் தற்போது கோடிகளில் வீடு காட்டுகிறார்கள். இது முதலீடு, வேலைவாய்ப்பு . இவற்றால் யாழ் மண் அபிவிருத்தி அடைகின்றது. யாழ்ப்பாணம் அபிவிருத்தி அடைவதை சகிக்க முடியாதவரக்ள் பலர் உள்ளனர். நேற்றைய தவறுகளுக்கு குழப்பம் விளைவித்தவர்கள் தான் காரணம் . ஒருங்கமைப்பில் பிழைகள் நடந்தால் அவற்றை விமர்சனம் செய்தால் எதிர்காலத்தில் மற்றவர்களும் திருத்திக்கொள்வார்கள். இதனை நியாயப்படுத்த எங்கள் தவறை மறைப்பது நல்லது அல்ல ?
யாழ்ப்பாண மக்களாகிய நாம் வெட்கித் தலைகுனிய வேண்டும். ஒரு சிலரின் தவறுகள் ஒட்டுமொத்த யாழ்ப்பாண மக்களையும் பாதித்துள்ளது. யாழ்ப்பாண மக்களின் பண்பாடு எங்கே செல்கின்றது?