அரகலய போராட்டத்தின் ஸ்தாபகர் ரணில்: இளைஞர்கள் வீதியில் என்கிறார் நாமல்

அரகலய போராட்டத்தின் ஸ்தாபகர் ரணில்: இளைஞர்கள் வீதியில் என்கிறார் நாமல்

அரகலய போராட்டத்தில் ஈடுபட்ட பலர் தற்போது ஜனாதிபதி செயலகத்தில் பணிபுரிவதாக தெரிவித்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ ஜனாதிபதியும் போராட்டத்தின் ஸ்தாபகரே என கூறியுள்ளார்.

கொழும்பு – மயூராபதி ஸ்ரீ பத்ரகாளி அம்மன் கோவிலுக்கு சென்று சமய வழிபாடுகளில் ஈடுபட்டதைத் தொடர்ந்து நேற்று திங்கட்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“கொள்கை பிரச்சினைகளின் அடிப்படையில் தேர்தலில் போட்டியிடுவதை நாங்கள் விரும்பவில்லை. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஒரே நம்பிக்கை பொது மக்களின் நம்பிக்கையை நிறைவேற்றுவதே.

சிஸ்டம் மாற வேண்டும் என கூறிய இளைஞர்கள் இன்னும் வீதியில் தான் இருக்கிறார்கள். அரசியல் ஆதாயங்களுக்காக அதனைப் பயன்படுத்தியவர்களே கட்சிகளாக பிரிந்துள்ளனர்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணியாளர்களால் அது தெளிவாக நிருபிக்கப்பட்டுள்ளது. முன்னாள் போராட்டக்காரர்களில் சிலர் அவருடன் உள்ளனர்.

எனவே அவர் போராட்டத்தின் நிறுவனரும் ஆவார். அதனால் தான் நாம் ஒருவரையொருவர் நோக்கி விரல் நீட்டுவதில்லை. புத்திசாலித்தனமாகவும், எதிர்காலத்திற்கான உண்மையான திட்டத்துடன் முடிவுகளை எடுப்போம்” என்றார்.

CATEGORIES
Share This