13 ஆவது திருத்தம் மட்டுமே தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகும்!
ஜே.வி.பி மற்றும் தேசிய மக்கள் சக்தியினர் மாகாணசபை தொடர்பாக அண்மையில் வெளிப்படுத்திவரும் கருத்துகளுக்கு பதிலளிக்கும் வகையில் ஊடக அறிக்கையொன்றினை ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பேச்சாளருமான சுரேஷ் க. பிரேமச்சந்திரன் வெளியிட்டுள்ளார்.
குறித்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளதாவது” ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்தின்பொழுது மாகாணசபை முறைமைகள் பாதுகாக்கப்படும் என்றும் அதற்கான தேர்தல் விரைவாக நடத்தப்படும் என்றும் அதிலுள்ள அதிகாரங்கள் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என்றும் ஜனாதிபதியினாலும் அவருடன் இருக்கக்கூடிய ஏனைய கட்சி உறுப்பினர்களாலும் பிரசாரம் செய்யப்பட்டது.
வேறுபல உறுதிமொழிகள் கொடுக்கப்பட்டிருந்தாலும் மேற்கண்ட உறுதிமொழியானது முக்கியத்துவமானதும் முதன்மையானதுமாகும். புதிதாக வந்திருக்க்கூடிய அனுர அரசாங்கமானது இனவாதம் மதவாதம் போன்றவற்றிற்கு இந்த நாட்டில் இடமில்லை என்று கூறுகின்றது.
வடக்கு-கிழக்கு மாகாணங்களில் அவர்களுக்குக் கிடைத்த பாராளுமன்ற ஆசனங்களைக் கொண்டு தமிழ் மக்கள் மத்தியில் இனவாதம் ஒழிக்கப்பட்டுவிட்டது எனவும் பேசுகின்றனர்.
அனுர அரசாங்கமும் ஜேவிபியும் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். இலங்கை சுதந்திரமடைந்த காலத்திலிருந்து ஆட்சிப்பீடமேறிய அனைத்து அரசாங்கங்களும் பல்வேறுபட்ட வழிமுறைகளில் தமிழ் மக்களை அடக்கி ஒடுக்கி வந்தனர். இதன்காரணமாக அன்றிலிருந்து இன்றுவரை மாறிமாறி வந்த அரசாங்கங்களின் தமிழர் விரோத கொள்கைகளிலிருந்து தமிழ் மக்கள் தம்மை தற்காத்துக்கொள்ள இவற்றிற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டிய நிலையும் போராட வேண்டிய நிலையும் ஏற்பட்டது.
தம்மைத் தற்காத்துக்கொள்ள அவர்கள் எடுக்கும் முயற்சிகள் இனவாதம் ஆகாது. மாறாக தமிழ் மக்களது மொழியை, கல்வியை, கலாசாரத்தை, மத நம்பிக்கைகளை அழிக்க வேண்டுமென்றும் சிங்கள குடியேற்றங்களினூடாக அவர்களின் இருப்பை இல்லாமல் செய்ய வேண்டுமென்றும் நடைபெற்ற அனைத்துமே சிங்கள மேலாதிக்க இனவாதத் தன்மை கொண்டவை. இவை அகற்றப்படவேண்டும் என்பதில் எமக்கும் மாற்றுக்கருத்தில்லை.
கடந்த ஏழு வருடங்களாக மாகாணசபைத் தேர்தல்கள் நடைபெறவில்லை. இதன் காரணமாக மாகாணசபைக்கு உரித்தான அனைத்து அதிகாரங்களும் கொழும்பிலிருக்கின்ற அரசாங்கத்தாலேயே கையாளப்படுகின்றது. இப்பொழுது வந்திருக்கின்ற அரசாங்கமும்கூட மாகாணசபை தேர்தல்களை விரைந்து நடாத்துவதற்கான எவ்வித ஆயத்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாமல் 2025ஆம் வருட இறுதியிலோ அல்லது அதற்குப் பின்னராகவோ மாகாணசபைத் தேர்தல்களை நடத்தலாம் என்று கூறுகிறது.
மறுபுறத்தில் புதிய அரசியல் சாசனத்தில் 13ஆவது திருத்தத்தை முழுமையாக அகற்றுவோம் இது தேவையற்ற ஒரு விடயம் என்ற முடிவை ஜனதா விமுக்தி பெரமுன கட்சியின் செயலாளர் ரில்வின் டி சில்வா உறுதிபடக் கூறுகின்றார்.
தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு என்ன என்பதை முன்மொழிய மறுக்கும் பிரதமரோ ஜனாதிபதியோ அல்லது தேசிய மக்கள் சக்தியோ பதின்மூன்றாவதை இல்லாமல் செய்வோம் என்பதை தெளிவுபடக் கூறுகிறார்கள். இந்த நாட்டில் சிங்கள, தமிழ், முஸ்லிம் என்ற இன, மத பேதங்கள் இல்லை என்றும் நாங்கள் எல்லோரும் இலங்கையர்கள் என்றும் கூறுவதனூடாக தேசிய இனப்பிரச்சினை என்ற ஒன்று இல்லை என்றும் கூற முற்படுகின்றார்கள்.
தேசிய மக்கள் சக்தியானது தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கும் என்று நம்பக்கூடிய தமிழ் புத்திஜீவிகள்? கல்வியாளர்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள் இந்த வரலாற்றை நன்கு புரிந்துகொள்ள வேண்டும்.
எனவே ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியினராகிய நாம் தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினை ஒன்று இருக்கின்றதென்பதை ஏற்றுக்கொண்டு அதற்கான தீர்வை முன்வைக்க வேண்டும் என்பது எமது முதலாவது கோரிக்கையாகும்.
அந்தத் தீர்வு எட்டப்படும்வரையில் மாகாணசபைகளுக்கு உரித்தான பதின்மூன்றாவது திருத்தம் என்பது முழுமையாக அமுல்படுத்தப்படுவதுடன் மாகாணசபைத் தேர்தல்களும் மிக விரைவாக நடத்தப்பட்டு மக்களால் தெரிந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளிடம் மாகாணசபை நிர்வாகங்கள் ஒப்படைக்கப்பட வேண்டும்.
பதின்மூன்றாவது திருத்தம் ஒன்று மட்டுமே தமிழ் மக்கள் கைவசம் இருக்கக்கூடிய ஒரேயொரு பாதுகாப்பு அரணாக தற்பொழுது இருக்கின்றது.
டொனாமூர் அரசியல் யாப்பிலிருந்த 29ஆவது சரத்தை அழித்தொழித்ததுபோல மாகாணசபை முறைமையையோ அல்லது அதற்கான அதிகாரங்களை வழங்குகின்ற பதின்மூன்றாவது திருத்தத்தையோ இல்லாதொழிக்க நாங்கள் அனுமதிக்கக்கூடாது.
முப்பத்தேழு வருடங்களாக இந்த மாகாணசபையால் எந்தப் பிரயோசனமும் இல்லை என்றும் சிலர் கூறுகின்றார்கள். ஆனால் 1988ஆம் ஆண்டு மாகாணசபைகள் உருவாக்கப்பட்ட போதும்கூட 2009ஆம் ஆண்டுவரை இந்த நாட்டில் ஒரு யுத்தம் நடைபெற்றது. ஆனால் 2009ஆம் ஆண்டிற்குப் பின் ஆட்சிபீடம் ஏறிய அரசாங்கங்களும் மாகாணசபைத் தேர்தல்களை உரிய காலத்தில் நடத்தாமலும் அதனை ஒத்தி வைப்பதுடன் அதிகாரங்களை நடைமுறைப்படுத்தாமலும் காலத்தை ஓட்டினார்களே தவிர மாகாணசபை முறைமையை உயிர்த்துடிப்புடன் செயற்படுத்துவதற்கான எந்த அக்கறையையும் அவர்கள் வெளிப்படுத்தவில்லை.
பதின்மூன்றாவது திருத்தம் முழுமையாக நிறைவேற்றப்படவேண்டும் என்பதை மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்திற்கு உள்ளும் வெளியிலும் உரக்கக் கூற முன்வரவேண்டும்” இவ்வாறு சுரேஷ். க.பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.