இந்திய – இலங்கை கப்பல் சேவை: வாரத்தில் 03 நாட்கள் மாத்திரமே இயங்கும்
இந்தியாவின் நாகப்பட்டினம் மற்றும் இலங்கையின் காங்ககேசன் துறை இடையிலான பயணிகள் கப்பல் சேவை 03 நாட்கள் மாத்திரமே இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா-இலங்கை இடையே நல்லுறவை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 14 ஆம் திகதி செரியாபாணி என்ற பயணிகள் கப்பல் இயக்கப்பட்டது.
வடகிழக்கு பருவமழை காரணமாக அதே மாதம் 23 ஆம் திகதி இந்த சேவை இடை நிறுத்தப்பட்டது.
இதன்பின்னர் நாகப்பட்டினத்திலிருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு மீண்டும் சிவகங்கை கப்பலை இயக்க தீர்மானிக்கப்பட்டது.
கடந்த 16 திகதி பயணிகள் கப்பல் சேவை ஆரம்பமான நிலையில் வாரத்தில் 07 நாட்களும் இந்த சேவை இடம்பெறும் என அறிவிக்கப்பட்டது.
போதிய பயணிகள் இன்மையால் செப்டம்பர் 15 ஆம் திகதி வரை, வாரத்திற்கு செவ்வாய், வியாழன் மற்றும் ஞாயிறு ஆகிய 03 நாட்கள் மாத்திரம் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
காலை 08 மணிக்கு நாகை துறைமுகத்திலிருந்து புறப்படும் கப்பல் காங்கேசன் துறைமைக்கும் நண்பகல் 12 மணிக்கும் வந்தடையும்.
பின்னர் பிற்பகல் 02 மணிக்கு காங்கேசன் துறைமுகத்திலிருந்து புறப்பட்டு மாலை 06 மணிக்கு நாகை துறைமுகத்தை கப்பல் சென்றடையும்.