அரசியல் நண்பரா வகுப்புத் தோழரா?: தினேஸ் இன்று எடுக்கப்போகும் முடிவு என்ன?

அரசியல் நண்பரா வகுப்புத் தோழரா?: தினேஸ் இன்று எடுக்கப்போகும் முடிவு என்ன?

இலங்கை நாடாளுமன்றத்தில் பல மூத்த அரசியல்வாதிகள் உள்ளனர். இவர்களில் சிலர் ஒரே பாடசாலையில் கற்ற வகுப்புத் தோழர்களாகவும் உள்ளனர். அவர்களில் இரண்டு முக்கிய நபர்கள்தான் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் பிரதமர் தினேஸ் குணவர்தனவும்.

இருவரும் கொழும்பு ரோயல் கல்லூரியின் பழைய மாணவர்களாகும். என்றாலும், அரசியல் களத்தில் இருவரும் இருதுருவ அரசியலிலேயே ஈடுபட்டனர்.

ரணில் விக்ரமசிங்க முதலாளித்துவ சித்தாந்தங்களையும் பிரதமர் தினேஸ் குணவர்தன கம்யூனிச அல்லது சமதர்ம பொருளாதார அரசியலையும் பின்பற்றியவர்கள்.

இந்த நிலையில் கடந்த 2022ஆம் ஆண்டு ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக தெரிவானது பிரதமர் பதவிக்கு தினேஸ் குணவர்தனவை நியமித்தார்.

நாடாளுமன்றத்தில் இருவரும் அருகருகே அமர்ந்த முதல் சந்தர்ப்பமாக அது கருதப்பட்டது.

என்றாலும், தினேஸ் குணவர்தன முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் நெருங்கிய அரசியல் நண்பர் என்பதுடன், அவரது கட்சியான மகாஜன எக்சத் பெரமுன மகிந்த ராஜபகச் தரப்பு மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடனேயே தேர்தல் கூட்டணிகளை அமைத்து கடந்த காலத்தில் போட்டியிட்டுள்ளது.

ஆனால், இன்று ஒரு சவாலான நிலையை தினேஸ் குணவர்தன எதிர்கொண்டுள்ளார். இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்குவதென அவரது கட்சி இன்று வியாழக்கிழமை முடிவுவெடுக்க உள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் பிரதமர் தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என்றால், அவருக்கு ஆதரவான நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும்.

அல்லது பொதுஜன பெரமுன முன்னிறுத்தும் வேட்பாளரை ஆதரிக்க வேண்டும் என்றால், அவரது பிரதமர் பதவியை இராஜினாமா செய்ய வேண்டும்.

நெருங்கடியான அரசியல் சூழ்நிலையை எதிர்கொண்டுள்ள மகாஜன எக்சத் பெரமுன இன்று எடுக்க உள்ள தீர்மானம் தொடர்பில் அரசியல் ஆய்வாளர்களும் ரணில் மற்றும் மகிந்தவின் ஆதரவாளர்களும் உற்றுநோக்கி வருகின்றனர்.

CATEGORIES
Share This