தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை சம்பளம் போதுமானதா?; அறிக்கைகள் கூறும் தகவல்
தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை சம்பள உயர்வு தொடர்பில் அநேகமான விடயங்கள் ஆலோசிக்கப்பட்டு வருகின்றன.
கடந்த தொழிலாளர் தினத்தன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தோட்டத் தொழிலாளர்களின் பிரதான கோரிக்கையான சம்பள உயர்வுக்கு பதிலளித்திருந்தார்.
அதன்படி, அதனை 1700 ரூபாவாக அதிகரிப்பதாக உறுதியளித்திருந்த நிலையில் அந்த விடயத்துக்கு தோட்ட கம்பனிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தன.
காலம் காலமாக இந்நாட்டில் மிகக் குறைந்தளவு சம்பளம் பெறக்கூடிய ஒரு தொழிலாக தோட்டத் தொழில் விளங்கியது.
அதன்படி, கடந்த 2010ஆம் ஆண்டில் தோட்டத் தொழிலாளி ஒருவரின் சம்பளம் 405 ரூபாவாக காணப்பட்டுள்ளது.
2011ஆம் ஆண்டில் இது 515 ரூபாவாக அதிகரிக்கிறது.
2013ஆம் ஆண்டில் 620 ரூபாவாக அதிகரித்துள்ள நிலையில் அதன் பின்னர் கடந்த 2016ஆம் ஆண்டில் 730 ரூபாவாக அதிகரிக்கப்படுகின்றது.
2019ஆம் ஆண்டில் 750 ரூபாவாக அதிகரிக்கப்பட்ட தோட்டத் தொழிலாளி ஒருவரின் சம்பளம் அவர்களின் அப்போதைய கோரிக்கையின்படி, கடந்த 2021ஆம் ஆண்டில் 1000 ரூபாவாக அதிகரிக்கப்படுகின்றது.
இந்த அதிகரிப்பின் பின்னணியில் அவர்களின் பல போராட்டங்களும் மறைந்துள்ளன.
இவ்வாறு அதிகரிக்கப்பட்டு வந்த 1000 ரூபாய் என்ற அடிப்படை சம்பளத்தை 1700 ரூபாவாக அதிகரிக்குமாறு விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டது.
அதன்படி, தோட்டத் தொழிலாளி ஒருவனின் நாளாந்த அடிப்படை சம்பளம் 1350 ரூபாய் மற்றும் நாளாந்த விசேட சலுகை 350 ரூபாய் உட்பட மொத்தம் 1700 ரூபாயாக கணக்கிடப்பட்டுள்ளது.
தோட்டத் தொழிலாளியின் வாழ்க்கைக்கு இது போதுமா, நடைமுறை வாழ்க்கைக்கு இது போதுமா என பல கேள்விகள் விமர்சனங்கள் எழுப்பப்படுகின்றன.
தோட்டத் தொழிலாளர்களின் ஒப்பந்தத்தின்படி, தொழிலாளர் ஒருவருக்கு மாதாந்தம் 25 நாட்கள் மட்டுமே வேலை செய்ய முடியும்.
அதன்படி, நாளாந்த சம்பளமான 1000 ரூபாயைப் பெறும் தொழிலாளி ஒருவருக்கு மாதாந்தம் 25,000 ரூபாயை ஊதியமாக பெற்றுக்கொள்ள முடிகிறது.
நான்கு தொடக்கம் ஐந்து பேருடனான ஒரு குடும்பத்தில் இருவர் மாத்திரம் பணி புரிந்தால் ஒரு மாதத்துக்கான வாழ்வாதாரம் 50,000 ரூபாவாகும்.
இதேவேளை, 1700 ரூபாய்ப்படி மாதத்தில் 25 நாட்கள் பணிபுரியும் ஒரு தோட்டத் தொழிலாளியால் 42,500 ரூபாயை உழைக்க முடியும்.
நான்கு தொடக்கம் ஐந்து பேருடனான ஒரு குடும்பத்தில் இரு உறுப்பினர்கள் மாத்திரம் பணி புரிந்தால் மாதாந்த வருமானம் 85,000 ரூபாவாக பதிவு செய்யப்படுகிறது.
பொதுவாக, நாட்டில் தற்போதைய சூழலில் ஒரு குடும்பத்தை நடத்த 64,000 ரூபாய் தேவைப்படுவதாக அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.