இலங்கையில் மீண்டும் ஒரு உள்நாட்டுப் போர் உருவாகலாம்
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பொருளாதார மறுசீரமைப்புச் சட்டத்திற்கு அப்பால் எந்தவொரு குழுவும் செயற்பட்டால் உள்நாட்டு யுத்தம் ஏற்படலாம் என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தன எச்சரித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற அரசியல் நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“பொருளாதார மறுசீரமைப்புச் சட்டம் தான் இலங்கையில் அடுத்த அரசியல் வரலாற்றில் காணப்படக்கூடிய விசேடமான சட்டம். அதனை மீறி இலங்கையில் யாருக்கும் அரசியல் நடத்த முடியாது.
சம்பிரதாய ரீதியாக மீண்டும் பொது மக்களை ஏமாற்ற முடியும். கட்டுக்கதைகளை அவர்களுக்கு கூற முடியும்.
எனினும், கட்டுக்கதைகளை கூறும் அரசியல் கட்சிகள் நான்காவது உள்நாட்டுப் போரை பொறுப்பேற்க வேண்டி வரும்.
உதாரணமாக, ஏப்ரல் போராட்டம், 1987 மற்றும் 1988 இல் இடம்பெற்ற சம்பவங்கள் , கடந்த காலங்களில் இடம்பெற்ற உள்நாட்டுப் போர் இனி பொய் வாக்குறுதிகளை வழங்கி பொதுமக்களை ஏமாற்றினால் மீண்டும் நான்காவதாக ஒரு போர் மூளும் வாய்ப்புகள் உள்ளன.
ஒரு சிவில் சமூகத்தை அழிக்கும் நோக்கில் பொய்களை பிரச்சாரம் செய்தால் அதற்கான பொறுப்பையும் அவர்களே ஏற்க வேண்டி வரும் .” என கூறியுள்ளார்.
இதேவேளை, தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்க கட்சிகளை பிளவுபடுத்துவதாக பல பேச்சுக்கள் அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகின்றன.
இந்த கருத்துக்களுக்கும் வஜிர அபேவர்தன பதில் வழங்கியுள்ளார்.
”தற்போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை பிளவுபடுத்தியுள்ளதாக அனைவரும் தெரிவித்து வருகின்றனர்.
எனினும், ரணில் விக்கரமசிங்க ஜனாதிபதி ஆகும் போதே பொதுஜன பெரமுன பிளவுபட்டே இருந்தது. அதை தற்போது ரணில் விக்கரமசிங்க மீள இணையச் செய்துள்ளார். அவர் இப்போதும் அரசியல் கட்சிகளை பிரிக்க வேண்டாம் எனவே தெரிவித்து வருகின்றார்.” என சுட்டிக்காட்டினார்.
மேலும், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதிக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதிநிதிகள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்துள்ளனர்.
ஜனாதிபதிக்கு பூரண ஆதரவை தெரிவிக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு தீர்மானித்துள்ளதாக அங்கு தெரிவித்துள்ளனர்.
அவ்வாறானதொரு கூட்டுறவின் ஊடாகவே நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியும் என தெரிவித்த ஜனாதிபதி, அனைவரையும் ஒன்றிணைப்பதே தமது நோக்கம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.