தமிழ்,முஸ்லிம், கட்சிகளின் ஆதரவின்றி ஜனாதிபதியாக தெரிவானவர் அநுரக

தமிழ்,முஸ்லிம், கட்சிகளின் ஆதரவின்றி ஜனாதிபதியாக தெரிவானவர் அநுரக


தமிழ்,முஸ்லிம், கட்சிகளின் ஒத்துழைப்பு இன்றி வடக்கு, கிழக்கு, தெற்கு மலையக தமிழ், முஸ்லிம் மக்களின் ஆதரவுடன் அநுர குமார   ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார். இம்முறை தேசிய மக்கள் சக்தி ஊடாகவே கூடுதலான முஸ்லிம்கள் பாராளுமன்றம் செல்வார்கள். அரசாங்கம் தவறு செய்வதாக இருந்தால் தான் பலமான எதிர்கட்சி தேவை. நாம் அப்படி தவறு செய்யமாட்டோம் என தேசிய ஆசிரியர் தொழிற்சங்க செயலாளரும் கம்பஹா மாவட்ட தேசிய மக்கள் சக்தி வேட்பாளருமான மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார்.
நீர்கொழும்பு, பெரியமுல்லை, றஹுமானாபாதில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே  இவ்வாறு தெரிவித்த     அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்,
 எமது நாட்டை மாறி மாறி ஆட்சிசெய்த   கட்சிகளுக்கு தற்போது இடமில்லை என்பது ஜனாதிபதி தேர்தலில் நிரூபணமாகியுள்ளது. இனிமேல் ஊழல்,மோசடி உள்ளவர்களுக்கு இடமில்லை. எம்மைப் பிரிப்பதற்காக பொய்யான கதைகளை கட்டினார்கள். தே.ம.ச. வெற்றிபெற்றால் முஸ்லிம்களுக்கு தாடி வைக்க முடியாது, விகாரைகளில் பிக்குகளுக்கு தானம் வழங்க மாட்டார்கள் வெளிநாட்டு தூதுவர்கள் தொடர்பை துண்டித்துக் கொண்டு சென்றுவிடுவார்கள் என்ற பிழையான தகவல்களை சமூக மயப்படுத்தினார்கள்.
    இவற்றைப் கருத்தில்  கொள்ளாத மக்கள் திசைகாட்டிக்கு வாக்களித்தார்கள். ஹக்கீம், றிசாட் பதியுதீனின் முஸ்லிம் கட்சிகளினதும் தமிழ் கட்சிகளினதும் ஒத்துழைப்பு இன்றி  வடக்கு கிழக்கு தெற்கு மலையக தமிழ், முஸ்லிம் மக்களின் பெரும்பான்மை ஆதரவுடன் அநுர  ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்.
     முஸ்லிம் கட்சிகளின் ஊடாகவன்றி தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகளாக இம்முறை கூடுதலான முஸ்லிம்கள் பாராளுமன்றம் செல்வார்கள் என்பதில் சந்தேகமில்லை. அந்த வகையில் முனீர் முலப்பர் கம்பஹா மாவட்டத்திலிருந்து முஸ்லிம்களின் ஆதரவுடன் மாத்திரமன்றி சிங்கள  மக்களின் வாக்குகளுடனும் பெளத்த பிக்குகளின் ஆசிர்வாதத்துடனும் இம்முறை பாராளுமன்றம் செல்வார். எமது கட்சி பட்டியல்களில் தகுதியான சிறந்த வேட்பாளர்கள் போட்டி போடுவது மாத்திரமன்றி எதிர் வரும் பாராளுமன்றத்தில் திசைகாட்டியில் கூடுதலான முஸ்லிம் எம.பி. கள் இருப்பார்கள்.
     மக்களை ஏமாற்றி வேற்றுமையை விதைத்த யுகம் முடிவுற்றுள்ளது. உங்களை தலைமை தாங்கிய முஸ்லிம் கட்சிகள் முஸ்லிம் சிங்களம் மக்களிடையே பகைமையை உருவாக்கி பிரித்து வைத்தனர்.     ஹக்கீம், றிசாட், அத்தாவுல்லா ஆகியோர்களின் செல்வாக்கு வீழ்ச்சி அடைந்துள்ளது என்றார்.

CATEGORIES
Share This