ஜனாதிபதித் தேர்தல் நெருங்கிவிட்டது; தமிழ், முஸ்லிம் கட்சிகளின் நிலைப்பாடு என்ன?

ஜனாதிபதித் தேர்தல் நெருங்கிவிட்டது; தமிழ், முஸ்லிம் கட்சிகளின் நிலைப்பாடு என்ன?

இலங்கைத் தீவில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் என தேர்தல்கள் ஆணைக்குழு கடந்த வெள்ளிக்கிழமை உத்தியோகப்பூர்வமாக அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஊடாக அறிவித்திருந்தது.

எதிர்வரும் 14ஆம் திகதிவரை வேட்பாளர்கள் தமது கட்டுப்பணத்தை செலுத்த முடியும். 15ஆம் திகதி காலை 9 மணிமுதல் நண்பகல் 12 மணிவரை வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.

தேர்தலுக்கான நாட்கள் நெருங்கிவருவதால் தென்னிலங்கையில் பெரும் அரசியல் அதிவர்வலைகள் உருவாகியுள்ளன. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு கடந்த இரண்டு வருடங்களாக ஆதரவளித்து ஆளுங்கட்சியாகவும் செயல்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அக்கட்சியின் சார்பில் வேட்பாளர் ஒருவரை களமிறக்கும் முடிவை இன்று திங்கட்கிழமை அறிவித்துள்ளது.

ஆனால், பொதுஜன பெரமுனவில் சிரேஷ்ட தலைவர்கள் மற்றும் அமைச்சரவையில் உள்ள அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் என அனைவரும் சுயாதீன வேட்பாளராக போட்டியிட உள்ளதாக கூறும் ரணில் விக்ரமசிங்கவை ஆதரித்து வருகின்றனர்.

ஐக்கிய மக்கள் சக்தி, பொதுஜன பெரமுன மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் உள்ள சிலரை இணைத்து பரந்தப்பட்ட கூட்டணியொன்றை அமைக்கும் முயற்சியில் ரணில் ஈடுபட்டுள்ளதுடன், விரைவில் கூட்டணிக்கான ஒப்பந்தங்களையும் கைச்சாத்திட உள்ளார்.

அதேபோன்று பொதுஜன பெரமுன எடுத்துள்ள தீர்மானத்தின் பிரகாரம் வர்த்தகரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தம்மிக்க பெரேராவை வேட்பாளராக களமிறக்க உத்தேசித்துள்ளது. பிரதமர் வேட்பாளராக நாமல் ராஜபக்ச களமிறக்கப்பட உள்ளதாகவும் தெரியவருகிறது.

இந்த நிலையில் ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாச, அனுரகுமார திஸாநாயக்க என மூன்று பிரதான வேட்பாளர்கள் தெற்கில் தேர்தலில் களங்கண்டுள்ள சூழலில் தமிழ், முஸ்லிம் கட்சிகளின் ஆதரவு தொடர்பிலான மக்களின் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய மக்கள் சக்திக்கான ஆதரவை அறிவித்துவிட்டது. என்றாலும், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை அக்கட்சியின் உயர்பீடம் தாருசலாமில் கூடி உத்தியோகப்பூர்வமான அறிவிப்பை வெளியிட உள்ளது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் எதிர்வரும் 5ஆம் திகதி தமது இறுதி தீர்மானத்தை அறிவிக்க உள்ளதாக அக்கட்சியின் தலைவர் ரிசாத் பதியூதீன் தெரிவித்துள்ளார். கடந்தகாலத்தில் மகிந்த ராஜபக்சவுடன் இணைந்து செயல்பட்ட ஏ.எச்.எம்.அதாவுல்லா ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளித்துள்ளார்.

இந்த நிலையில் இலங்கை தமிழரசுக் கட்சி தமது ஆதரவு யாருக்கென முடிவெடுக்க எதிர்வரும் 10,11ஆம் திகதிகளில் கூட உள்ளது.

வடக்கில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை களமிறக்க தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற ிஉறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரதன், நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேம சந்திரன் மற்றும் 45 சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் இணைந்து முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழத் தேசிய மக்கள் முன்னணி எவருக்கும் ஆதரவு இல்லை என அறிவித்துள்ளதுடன், வடக்கு, கிழக்கு மக்கள் தேர்தலை புறக்கணிக்க வேண்டுமெனவும் அழைப்பு விடுத்துள்ளது.

இதேவேளை, மலையகத்தை பொறுத்தமட்டில் தமிழ் முற்போக்குக் கூட்டணி சஜித் பிரேமதாசவுக்கு தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளது. ஏற்கனவே புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றையும் கைச்சாத்திட்டுள்ளது.

எதிர்வரும் 2ஆம் திகதி தமிழ் முற்போக்குக் கூட்டணியின் அரசியல் உயர்பீடம் கூடி மேற்கொள்ளப்படும் உடன்படிக்கை தொடர்பில் கலந்துரையாடல் நடத்த உள்ளது.

எதிர்வரும் 8ஆம் திகதி ஐக்கிய மக்கள் சக்தி தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள கூட்டணிக்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவும் உள்ளது.

மலையகத்தின் மற்றுமொரு பிரதான கட்சியான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ரணில் விக்ரமசிங்கவுக்கான ஆதரவை வெளிப்படுத்தியுள்ளது. என்றாலும், அதன் உயர்பீடம் அடுத்தவாரம் கூடி உத்தியோகப்பூர்வ தீர்மானத்தை வெளியிட உள்ளது.

எவ்வாறாயினும் இம்முறை வரலாறு காணாத வகையில் விஜேதாச ராஜபக்ச, சரத் பொன்சேகா, திலித் ஜயவீர என பிரபல்யமான வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளை எந்தவொரு வேட்பாளராலும் பெற முடியாதென கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.

வெரிடேர்ச் ரிசர்ஸ் நிறுவனம் அண்மையில் நடத்தியுள்ள கருத்துக்கணிப்பில் சஜித் மற்றும் அனுரவுக்கு சம அளவான ஆதரவு மக்கள் மத்தியில் இருப்பதாக கூறியுள்ளது. ரணில் விக்ரமசிங்கவுக்கான ஆதரவு குறைவாகவே இருப்பதாகவும் குறித்த கருத்துக் கணிப்பில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

எந்த பின்புலத்தில் அடுத்த இரண்டு வாரங்கள் இலங்கை அரசியலில் தீர்மானமிக்க மற்றும் அரசியல் புரட்சிகள் இடம்பெற போகும் வாரங்களாக இருக்கும் என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அதேபோன்று தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகியிருந்தாலும் வரலாற்றில் இதற்கு முன்பிருந்தது போன்று ஜனாதிபதித் தேர்தல் நிச்சயமாக நடைபெறும் என்ற நம்பிக்கை இன்னமும் மக்கள் மத்தியில் எழவில்லை.

அதற்கு பிரதான காரணம் அரசியலமைப்பை கரைத்துக் குடித்தவராக உள்ள ரணில் விக்ரமவிங்க எந்தநேரத்தில் எதை செய்வார் என அவருக்கு அருகில் உள்ளவர்களால்கூட அனுமானிக்க முடியாது.

பொலிஸ்மா அதிபரின் நியமனம் தவறானதென உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்மானம் தவறானதென வெளியாகியுள்ள அரசாங்கத்தின் அறிவிப்பானது, நாட்டின் நீதித்துறைக்கு விடுக்கப்பட்டுள்ள பாரயி சவாலாகும்.

கடந்த காலத்தில் ஜனநாயகம், நீதித்துறையின் சுயாதீனம் பற்றி பேசிய ரணில் விக்ரமசிங்க இன்று அவரது அதிகாரத்முக்கான நீதித்துறையின் தீர்ப்பை சவாலுக்கு உட்படுத்தியுள்ளார். இந்த காரணிகள்தான் தேர்தல் தொடர்பிலான நிச்சயமற்ற தன்மையை மக்கள் மத்தியில் உருவாக்கியுள்ளது.

சுப்ரமணியம் நிஷாந்தன்

CATEGORIES
Share This