பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 200 பேர் அடையாளம்?: சமூக ஊடகங்களில் பகிரப்படும் எச்சரிக்கை பதிவு தொடர்பில் அவதானம்
பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர்கள் இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றன.
இதன்படி, பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மாலத்தீவு பிரஜைகள் 200 பேர் ‘லங்கா’ தனியார் வைத்தியசாலையில் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக வைத்தியசாலைக்கு செல்ல வேண்டாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
அவ்வாறு பகிரப்படும் பதிவில், “அனைவருக்கும் வணக்கம். ‘லங்கா’ மருத்துவமனைக்கு காலடி எடுத்து வைக்க வேண்டாம். 200 மாலைத்தீவினர்கள் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவருக்கும் பன்றிக்காய்ச்சல் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் ஏற்கனவே 2-3 பேர் இறந்துவிட்டனர்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக பொது மக்கள் மத்தியில் பதற்றம் மற்றும் அச்சம் ஏற்பட்டுள்ள நிலையில், இவ்வாறு பகிரப்படும் செய்தி தொடர்பில் FactSeeker ஆராய்ந்து உண்மைத்தன்மையினை வெளிப்படுத்தியுள்ளது.
இதன்படி, சமூக வலைதளங்கள் மற்றும் வட்சப் குழுக்களில் பகிரப்படும் செய்தியில் எவ்வித உண்மைத்தன்மையும் இல்லை என வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அத்துடன், இந்தக் குற்றச்சாட்டு உண்மைக்குப் புறம்பானது என்பதை உறுதி செய்யும் வகையில் வைத்தியசாலை நிர்வாகம் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது.
இதற்கமைய, தமது வைத்தியசாலையில் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளர்கள் கண்டறியப்பட்டதாக அல்லது சிகிச்சை அளிக்கப்படுவதாக சமூக ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் முற்றிலும் தவறானவை என ‘லங்கா’ வைத்தியசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது.
மேலும், இந்த விடயம் தொடர்பான முழுமையான தெளிவுபடுத்தல் விரைவில் இடம்பெறும் எனவும் குறிப்பிட்டுள்ளது.
இதனிடையே, இவ்வாறான தகவல்கள் எதுவும் சுகாதார அமைச்சிற்கு பதிவாகவில்லை என்பதனை சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.