காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தாய்மார்களுடைய போராட்டம்: 2700 நாட்கள் பூர்த்தி

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தாய்மார்களுடைய போராட்டம்: 2700 நாட்கள் பூர்த்தி

இலங்கைத்தீவின் வடக்கு கிழக்கில் இடம்பெற்ற போரின் போதும் 2009 இன் பின்னரான சூழலிலும் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்ட தமது அன்புக்குரியவர்களைக் கண்டறிவதற்காக சர்வதேச ஆதரவைப் பெறுவதற்காக, இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட தாய்மார்களின் நீண்டகாலப் போராட்டம் 2700 நாட்களைக் கடந்துள்ளது.

தமது உறவுகளுக்கு நீதி கோரி 2017 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம், 2700 நாட்களை நிறைவு செய்துள்ளது. கடந்த 13ஆம் திகதி வவுனியாவில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டு தமிழர் தாயகத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தின் செயலாளர், எதிர்கால இன அழிப்பில் இருந்து தமிழ் மக்களை காப்பாற்றுவது இப் போராட்டத்தின் நோக்கம் என தெரிவித்தார்.

நீதி கோரி போராட்டம்

“காணாமல் போன தமிழ்க் குழந்தைகளைக் கண்டறியவும், வருங்கால இன அழிப்பில் இருந்து தமிழ் மக்களைக் காப்பாற்றவும், தமிழின் இறையாண்மைக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளிடம் நீதி கோரியும் போராடி 2700 நாட்கள் நிறைவடைந்துள்ளன” என்று செயலாளர் எம்.ராஜ்குமார் இதன்போது தெரிவித்தார்.

பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் தமிழ்த் தாய்மார்களின் பிரச்சினை மட்டுமல்ல தமிழ் மக்களின் வாழ்வுரிமைப் பிரச்சினை எனத் தெரிவித்த எம்.ராஜ் குமார், போராடினால்தான் தமிழ் மக்கள் வாழ முடியும் என மேலும் வலியுறுத்தினார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

இதுதான் இனப்பிரச்சினையின் துருப்புச் சீட்டு. இதை நாம் சரியாக கையாள வேண்டும். தேசிய பிரச்சினைக்கு இறையாண்மை மட்டுமே தீர்வு. அதனைப் பெறுவதற்கான அனைத்துப் பணிகளையும் தமிழ் மக்கள் செய்ய வேண்டும்.

போரின் கடைசி தருணங்களில் பாதுகாப்பு படையினரிடம் சரணடைந்த பின்னர் மற்றும் போரின் கடைசி தருணங்களில் காணாமல் ஆக்கப்பட்ட தமது அன்புக்குரியவர்களுக்கு என்ன நடந்தது என்பதை வெளிப்படுத்துமாறு அரசாங்கத்துக்கு அழுத்தம் வழங்கி 2017ஆம் ஆண்டு பெப்ரவரி, மார்ச் மாதங்களில் வவுனியா, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டங்களில் சத்தியாக்கிரக இயக்கங்கள் ஆரம்பிக்கப்பட்டன.

மைத்திரி, ரணில் அரசாங்கம்

அவர்களுக்கு நடந்ததை ஆராயும் நோக்கில் மைத்திரி, ரணில் அரசாங்கத்தின் மூலம் 2018ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 28ஆம் திகதி காணாமல் போனோர் அலுவலகம் (OMP) ஸ்தாபிக்கப்பட்டது, எனினும், அந்த அலுவலகத்தால் உறவினர்கள் ஒருவரைக் கூட கண்டுபிடிக்க முடியவில்லை.” என தெரிவித்தார்.

சுமார் ஒரு வருடத்திற்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்ட கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியில் உள்ள சடலங்கள் காணாமல் ஆக்கப்பட்டவர்களுடையதா என காணாமல் போனோர் அலுவலகத்தின் (OMP) தற்போதைய தலைவர் மகேஷ் கட்டுலந்த வன்னியில் அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு சுமார் ஒரு வருடத்தின் பின்னர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

“காணாமல் போனவர்களின் நிலைமையை மிக உயர்ந்த தரத்தின்படி கண்டறிவதே எங்களின் எதிர்பார்ப்பு மற்றும் காணாமல் போனவர்களுக்கும் கண்டெடுக்கப்பட்ட சடலங்களுக்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா என்பதை கண்டறிவதும் எங்கள் எதிர்ப்பார்ப்பு ” என்று சட்டத்தரணி மகேஷ் கட்டுலந்த கடந்த 5ஆம் திகதி கொக்குத்தொடுவாய்க்கு அருகில் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.

உயிரியல் தரவுகள்

தோண்டப்பட்டு வரும் கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியில் புதைக்கப்பட்டுள்ள சடலங்கள் சந்தேகத்திற்குரியதா எனத் தீர்மானிக்க தேவையான உயிரியல் தரவுகள் சேகரிக்கப்பட்டுள்ளதாக சடலங்களை தோண்டி எடுக்கும் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி வைத்தியர் கனகசபாபதி வாசுதேவ தெரிவித்தார்.

வலுக்கட்டாயமாக காணாமல் போனவர்களின் உடல்கள் டிஎன்ஏ பகுப்பாய்விற்குப் பயன்படும் வகையில் மண்டை ஓட்டில் இருந்து பற்கள் அகற்றப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

மனித புதைகுழியில் புதைக்கப்பட்டுள்ள சடலங்களை பரிசோதிக்குமாறு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கோரினால், டிஎன்ஏ பரிசோதனைகளை மேற்கொள்ள வாய்ப்பு உள்ளதாக சட்ட வைத்திய அதிகாரி ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
Share This