இன்டர்போல் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட சந்தேகநபர்கள்: இலங்கைக்கு நாடு கடத்துவதில் சட்ட சிக்கல்
சர்வதேச பொலிஸாரின் சிவப்பு அறிவிப்புப் பட்டியலில் உள்ள இலங்கையர்களை நாடு கடத்துவதில் சவால்கள் ஏற்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சர்வதேச சிவப்பு அறிவிப்புகளின் கீழ் தேடப்படும் நபர்களை நாடு கடத்த இலங்கை அதிகாரிகள் பல நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
சர்வதேச பொலிஸாரின் 164 சிவப்பு அறிவித்தல்களையும், 100 நீல அறிவித்தல்களையும் உள்ளூர் பொலிஸார் வெற்றுள்ளனர்.
அவற்றில் தேடப்படும் இலங்கையர்களின் பலரின் பெயர் இடம்பெற்றுள்ளமை கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், சந்தேக நபர்களை இலங்கைக்கு ஒப்படைப்பது சர்வதேச சட்டக் கோட்பாடுகள் மற்றும் ஒப்படைப்புச் சட்டங்கள் உட்பட சட்ட சவால்களை முன்வைக்கிறது.
மரண தண்டனை நடைமுறைப்படுத்தப்படாவிட்டாலும், இலங்கை குற்றவாளிகளை ஐரோப்பிய நாடுகளில் இருந்து நாடு கடத்துவதற்கும் தடையாக உள்ளது.
நாடுகடத்தலுக்கு சந்தேக நபர் இருக்கும் நாட்டுடன் ஒப்பந்தம் தேவைப்படுகின்றது. அத்தகைய ஒப்பந்தம் இல்லாமல், நாடு கடத்துவது கடினமாகவோ அல்லது சாத்தியமற்றதாகவோ இருக்கலாம்.
164 சிவப்பு அறிவிப்புகளில், 50 க்கும் மேற்பட்ட தேடப்படும் குற்றவாளிகளை இலக்காகக் கொண்டுள்ளன, அவர்களில் பலர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் பதுங்கியிருப்பதாக கூறப்படுகிறது.
பயங்கரவாதம், மோசடி மற்றும் பணமோசடி ஆகிய குற்றங்களுக்காக தேடப்படும் நபர்களி சிவப்பு பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சில மத்திய கிழக்கு நாடுகளுடன் நாடு கடத்தல் ஒப்பந்தங்கள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துமாறு பொது பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்கா, துருக்கி, உக்ரைன், ரஷ்யா, வியட்நாம், சீனா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளுடன் இலங்கை நாடு கடத்தல் ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது.
இந்நிலையில், தேடப்படும் சில நபர்களை இலங்கைக்கு நாடு கடத்துமாறு அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சில நேர்மறையான பதில்கள் கிடைத்துள்ளதாக கூறப்படுகின்றது.
இந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு சட்டமா அதிபர் திணைக்களம், பாதுகாப்பு அமைச்சு மற்றும் தொடர்புடைய இராஜதந்திரிகளுடன் பொலிஸார் இணைந்து செயற்படுவதாக கூறப்படுகின்றது.
பல தேடப்படும் நபர்கள் பிரான்ஸ், இத்தாலி மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளிலும் இருப்பதாக நம்பப்படுகிறது.
பல ஐரோப்பிய நாடுகள் மரண தண்டனையை ரத்து செய்துள்ளன, மேலும் அவர்கள் மரண தண்டனையை எதிர்கொள்ளக்கூடிய நாடுகளுக்கு தனிநபர்களை ஒப்படைக்கத் தயங்குவதாக கூறப்படுகின்றது.
இந்த ஆண்டு, தேடப்பட்ட எட்டு நபர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இது ஒரு வருடத்தில் அதிக எண்ணிக்கையிலான நாடு கடத்தல்களைக் குறிக்கிறது.
கடந்த நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளில், அதிகாரிகள் குறைந்தது 14 தேடப்பட்ட நபர்களை சிவப்பு அறிவிப்புகளின் கீழ் நாடு கடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.