இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் இன்று
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (11) வவுனியாவில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கட்சியின் தலைவர் மாவை. சோ.சேனாதிராஜா தலைமையில் நடைபெறவுள்ள இக்கூட்டம் இன்று முற்பகல் ஆரம்பமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தில் முதலாவது விடயமாக தமிழ் பொதுவேட்பாளராக பெயரிடப்பட்டுள்ள அரியநேத்திரனின் விடயம் எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. அவர் மீது நடவடிக்கைகளை எடுப்பதா, இல்லையா என்பது தொடர்பில் ஆராயப்படவுள்ளது.
எவ்வாறாயினும், அரியநேத்திரனும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுவதோடு, தான் தமிழ் அரசுக் கட்சியை விட்டுச் செல்லவில்லை. சுயேட்சையாக போட்டியிடுகின்றேன். கட்சி எந்த தீர்மானத்தினையும் எடுக்கவில்லை. அதனால் கட்சியின் தீர்மானத்துக்கு எதிராக செயற்பட்டவன் என்று குற்றஞ்சாட்ட முடியாது உள்ளிட்ட வாதங்களை முன்வைப்பதற்கு திட்டமிட்டுள்ளார்.
அதேபோன்று, மாவை.சோ.சேனாதிராஜாவும் உடனடியாக அரியநேத்திரன் மீது நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு இடமளிப்பார் என்று கூற முடியாது. அதேபோன்று கிளிநொச்சியில் நடைபெற்ற பொதுவேட்பாளருக்கு ஆதரவான கூட்டத்தில் சிறிதரனின் வகிபாகம் சம்பந்தமாகவும் கவனத்தில் கொள்ளப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதனையடுத்து, சுமந்திரன் தென்னிலங்கை தலைவர்களுடன் நடத்திய சந்திப்புக்கள், மாகாண சபை தேர்தல்கள் திருத்தச்சட்டம் உள்ளிடட இதர விடயங்களை பகிர்ந்துகொள்ளவுள்ளதோடு ஜனாதிபதி வேட்பாளர்களை சந்திப்பதற்கான தமிழரசுக் கட்சியின் உயர்மட்டக் குழுவொன்று ஸ்தாபிப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.