இந்தியாவின் ஆதரவுக்கு மத்தியில் சீனாவும் ஒத்துழைப்பு: கொழும்பில் ஜெய்சங்கருடனான சந்திப்பின் பின்னர் அறிவிப்பு

இந்தியாவின் ஆதரவுக்கு மத்தியில் சீனாவும் ஒத்துழைப்பு: கொழும்பில் ஜெய்சங்கருடனான சந்திப்பின் பின்னர் அறிவிப்பு

இலங்கைக்கான கடனை நீண்ட கால கடனாக நிலைநிறுத்த சீனா மேலும் ஆதரவு தெரிவுப்பதாக உறுதிப்படுத்தியுள்ளது.

இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கர் இலங்கைக்காக உத்தியோகபூர்வ பயணம் ஒன்றை மேற்கொண்டு இலங்கைக்கான இந்திய ஆதரவு தொடர்ந்து வழங்கப்படும் என்று தெரிவித்த பின்னணியில் சீனா இவ்வாறு அறிவித்திருக்கிறது.

இலங்கைக்கான இந்த பயணத்தின் போது அமைச்சர் ஜெய்சங்கர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஆகியோரை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

அமைச்சர் ஜெய்சங்கருடன் இந்திய வெளியுறவுத் துறையின் மூத்த அதிகாரிகள் குழுவினரும் கலந்துக் கொண்டுள்ளனர்.

இந்நிலையில், இலங்கையின் சமூக, பொருளாதார மேம்பாட்டிற்கு சீனா எப்போதும் ஆதரவளிப்பதைப் போன்றே கடன் நிலைத்தன்மையை அடைவதிலும் தொடர்ந்து ஆதரவளிக்கும் என சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஒருவர், நேற்று (19) பீஜிங்கில் தெரிவித்திருந்தார்.

சீனா மற்றும் இலங்கை இடையில் அண்மையில் சீனத் தலைநகரில் இடம்பெற்ற இராஜதந்திர ஆலோசனைகள் தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

சீனா மற்றும் இலங்கை இடையில் பீஜிங்கில் இடம்பெற்ற இராஜதந்திர ஆலோசனைகள் சீனா எக்சிம் வங்கியுடனான இறுதி ஒப்பந்தத்தை நோக்கி முன்னேறியதா அல்லது சீன அபிவிருத்தி வங்கியுடன் கொள்கை ரீதியான ஒப்பந்தத்தை நோக்கி முன்னேறியதா என ப்ளூம்பெர்க் செய்தி நிறுவனம் கேள்வி எழுப்பியிருந்தது.

அதற்கு பதிலளிக்கும் வகையில், சீன-இலங்கை இராஜதந்திர ஆலோசனையின் 13 ஆவது சுற்றில் இலங்கையின் சமூக பொருளாதார அபிவிருத்திக்கு சீன தரப்பு அதிகபட்ச ஆதரவை வழங்கியுள்ளதாக ஊடகப் பேச்சாளர் லின் ஜியன் தெரிவித்தார்.

அதன்படி, இலங்கையின் கடன் நிலைத்தன்மைக்கு ஆதரவளிப்பதற்கு உரிய நாடுகள் மற்றும் சர்வதேச நிதி நிறுவனங்களுடன் தொடர்ந்து பணியாற்ற சீனா தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

CATEGORIES
Share This