நாணயத்தை தலைகீழாக சுழற்றப்போகும் ரணில்; தேர்தல் நெருங்கும் வேளையில் பல அதிரடி நகர்வுகள்
ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி நடைபெற உள்ள நிலையில் வியாழக்கிழமை வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
40 பேர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட கட்டுப்பணத்தை செலுத்தியிருந்த போதிலும் 39 பேர் மாத்திரமே வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.
வெள்ளிக்கிழமை முதல் வேட்பாளர்கள் தமது பிரசார நடவடிக்கைகளை ஆரம்பிக்க உள்ளனர். பிரதான வேட்பாளர்களுள் ஒருவரான ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தமது முதலாவது பொதுக் கூட்டத்தை அநுராதபுரத்தில் நடத்த உள்ளார்.
நாளை சனிக்கிழமை இந்த பிரசாரக் கூட்டம் அநுராதபுரம் சல்காது மைதானத்தில் இடம்பெற உள்ளது. கூட்டத்துக்கான பிரமாண்ட ஏற்பாடுகளை ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவுங்கியுள்ள தரப்பினர் மேற்கொண்டு வருகின்றனர்.
தேர்தலில் வெற்றிபெற பல்வேறு வியூகங்களை வகுத்து செயல்பட்டுவரும் ரணில் விக்ரமசிங்க, எதிர் தரப்பில் இருந்து மேலும் பலரை தமது பக்கம் திருப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
தமிழ் முற்போக்குக் கூட்டணியின் சார்பில் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.வேலுகுமார் இன்று காலை ஜனாதிபதியை சந்தித்து தமது ஆதரவை வழங்கியுள்ளார்.
அதேபோன்று ஏற்கனவே, ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் நாடாளுமன்றத்துக்கு தெரிவாகியிருந்த ராஜித சேனாரட்ன உட்பட சில எம்.பிகள் தமது ஆதரவை ரணில் விக்ரமசிங்கவுக்கு வழங்கியிருந்தனர்.
இந்த நிலையில், அடுத்துவரும் நாட்களில் குறிப்பாக தேர்தலுக்கு அண்மித்த நாட்களில் ரணில் விக்ரமசிங்கவுக்கான ஆதரவைப் பெருக்கிக் கொள்ளும் வகையில் பல்வேறு வியூகங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
மேலும் பலர் எதிர்க்கட்சியில் இருந்து ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்க உள்ளதாக தெரியவருகிறது. நாணயத்தை தலைகீழாக சுழற்றுவது போல் ரணிலின் அடுத்தடுத்த நகர்வுகள் இருக்கும் என அரச தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, நாளைய தினம் ரணில் விக்ரமசிங்க அமைக்கப்போகும் கூட்டணி தொடர்பான அறிவிப்புகள் வெளியாக உள்ளதாகவும் இந்தக் கூட்டணியின் தலைவராக தினேஸ் குணவர்தன நியமிக்கப்பட உள்ளதாகவும் தெரியவருகிறது.