இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல் ஆரம்பம்
இந்தியாவின் 18ஆவது பாராளுமன்றத்தை தெரிவுசெய்வதற்கான தேர்தல்கள் ஏப்ரல் 19ஆம் திகதி முதல் ஆரம்பமாகி நடைபெறவிருக்கின்றன.
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை பாராளுமன்ற தேர்தல் நடத்தப்பட்டு புதிய அரசாங்கம் தெரிவு செய்யப்படும்.
உலகின் மிகப் பெரிய தேர்தல்களில் ஒன்றாக இந்தியாவின் பாராளுமன்றத் தேர்தல் கருதப்படுகின்றது.
18ஆவது பாராளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு 2024ஆம் ஆண்டு ஏப்ரல் 19ஆம் திகதி ஆரம்பமாகி, எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதி முடிவுக்கு வருகிறது.
தற்போது ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் பதவிக்காலம் இந்த ஆண்டு ஜூன் 16ஆம் திகத முடிவுக்கு வருகிறது.
அதற்குள் புதிய பாராளுமன்றத்தைத் தெரிவுசெய்ய வேண்டும். புதிய பாராளுமன்றத்தைத் தேர்வுசெய்வதற்கான அறிவிப்பு, இந்த ஆண்டு மார்ச் 16ஆம் திகதி இந்திய தேர்தல்கள் ஆணைக்குழுவால் வெளியிடப்பட்டது.
அதன்படி, இந்தத் தேர்தல்கள் ஏழு கட்டங்களாக நடக்கின்றன. ஏப்ரல் 19ஆம் திகதி 102 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 26ஆம் திகதி 89 தொகுதிகளுக்கும் மே 7ஆம் திகதி 94 தொகுதிகளுக்கும் மே 13ஆம் திகதி 96 தொகுதிகளுக்கும் மே 20ஆம் திகதி 49 தொகுதிகளுக்கும் மே 25ஆம் திகதி 57 தொகுதிகளுக்கும் ஜூன் முதலாம் திகதி 57 தொகுதிகளுக்கும் தேர்தல்கள் நடக்கவிருக்கின்றன.
இந்தியாவில் பெப்ரவரி மாதம் 8ஆம் திகதி நிலவரப்படி 96 கோடியே 88 இலட்சத்து 21 ஆயிரத்து 926 பேர் வாக்காளர்களாக உள்ளனர். இவர்களில் ஆண் வாக்காளர்கள் 49,72,31,994. பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 47,15,41,888. மூன்றாம் பாலினத்தவர் 48,044.
இதில் வேறு சில சுவாரஸ்யமான புள்ளிவிவரங்களும் இருக்கின்றன. இந்தியாவில் உள்ள வாக்காளர்களில் 100 வயதைக் கடந்தவர்களின் எண்ணிக்கை 2,38,791. பதினெட்டு முதல் பத்தொன்பது வயதுக்குட்பட்ட முதல் முறை வாக்காளர்களின் எண்ணிக்கை 1,84,81,610. அதேபோல, இந்திய மக்கள் தொகையில் 66.76 சதவீதம் பேர் வாக்காளர்களாக பதிவுசெய்துள்ளனர்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 6.19 கோடி. இவர்களில் ஆண்களின் எண்ணிக்கை 3.04 கோடி. பெண்களின் எண்ணிக்கை 3.15 கோடி. தமிழ்நாட்டில் ஆண்களைவிட பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகம். மூன்றாம் பாலினத்தவரின் எண்ணிக்கை 8294. நூறு வயதை எட்டியவர்களின் எண்ணிக்கை 8,765. முதல் முறையாக வாக்களிப்பவர்களின் எண்ணிக்கை 9.18 இலட்சம் பேர்.
ஏழு கட்டங்களாக இடம்பெறும் இந்த பாராளுமன்றத் தேர்தலில் முதல் கட்டத்திலேயே தேர்தலைச் சந்திக்கிறது தமிழ்நாடு – புதுச்சேரி. தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளிலும் புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியிலும் ஏப்ரல் 19ஆம் திகதி வாக்குப் பதிவு நடக்கவிருக்கிறது.
தமிழ்நாட்டில் 39 தொகுதிகளில் 950 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். புதுச்சேரி தொகுதியில் 26 பேர் களத்தில் இருக்கின்றனர். தமிழ்நாட்டிலேயே அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 54 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மாநிலத்திலேயே குறைவாக நாகப்பட்டினம் தொகுதியில் 9 வேட்பாளர்கள் களத்தில் இருக்கின்றனர்.
தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி என்ற பெயரில் தி.மு.க., காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, ம.தி.மு.க., கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகியவை இணைந்து போட்டியிடுகின்றன.
தேசிய ஜனநாயகக் கூட்டணி என்ற பெயரில் பாரதிய ஜனதா கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், இந்திய ஜனநாயகக் கட்சி, புதிய நீதி கட்சி, இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், ஓ. பன்னீர்செல்வம் அணி ஆகியவை இணைந்து தேர்தலை சந்திக்கின்றன.
அ.தி.மு.க. கூட்டணியில் அ.தி.மு.க., புதிய தமிழகம், எஸ்.டி.பி.ஐ., தே.மு.தி.க. ஆகியவை இணைந்து தேர்தலைச் சந்திக்கின்றன. இவை தவிர, நாம் தமிழர் கட்சி 40 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.
இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் திகதி நடைபெறும்.