தேர்தலுக்கு முன்னரான கட்சித் தாவல்கள்; வெளிப்படுத்திய மே தின மேடை

தேர்தலுக்கு முன்னரான கட்சித் தாவல்கள்; வெளிப்படுத்திய மே தின மேடை

உழைக்கும் தொழிலாளியின் 138ஆவது தொழிலாளர் தினம் முதலாம் திகதி கொண்டாடப்பட்டது. மே தினத்தின் அர்த்தம் மாறுமளவுக்கு முதலாம் திகதி பல நிகழ்வுகள் நடந்திருந்தாலும் கூட ஐக்கிய தேசியக் கட்சியின் மேடைக்கு ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து எத்தனை பேர் ஏறுவார்கள் என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் அதிகளவில் எதிர்ப்பார்க்கப்பட்டிருந்தது.

மே தின நிகழ்வுகளுக்கு முன்னதாக அதுவே பேசு பொருளாகவும் அமைந்திருந்தது.

மே தின மேடை

ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து ரணில் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சிக்கு குறித்த ஒரு தொகையினர் வருகைத் தருவார்கள் எனத் தெரிவித்திருந்தாலும் கூட எவரும் வருகைத் தந்திருக்கவில்லை.

பெரிதளவில் எதிர்ப்பார்க்கப்பட்ட ராஜித,வெல்கம போன்றோர் கூட சென்றிருக்கவில்லை.

எனினும், எதிர்ப்பாராத விதமாக ராஜபக்சவின் மொட்டுக் கட்சியிலிருந்து விலகி சுதந்திரமாக செயற்படும் அமைச்சர் கயாஷான் நவநந்தன ஐக்கிய தேசியக் கட்சியின் மே தின மேடைக்கு சென்றிருந்தார்.

இவர் கடந்த பொதுத் தேர்தலுக்கு மொட்டு சின்னத்தை பிரநிதித்துவப்படுத்தியிருந்தார்.

ஏமாற்றத்தில் நிறைவடைந்த எதிர்ப்பார்ப்பு

ரணிலுக்கு புகழாரம் சூடும் டயானா கமகே ஐக்கிய தேசியக் கட்சி மேடையில் அதிகளவில் எதிர்ப்பார்க்கப்பட்டாலும் அவரும் அன்று வருகைத் தந்திருக்கவில்லை.

இவ்வாறு, ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து எதிர்ப்பார்த்த எவரும் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் வருகைத் தந்திருக்கவில்லை.

எனினும், ஐக்கிய மக்கள் சக்தியின் பிரபல அரசியல் பிரமுகர்கள் பலரும் அக்கட்சியின் மே தின பேரணியை தவிர்த்தமை அரசியல் வட்டாரங்களில் கேள்வியை எழுப்பியுள்ளது.

கட்சித் தாவல்

எவ்வாறாயினும், ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து ஆளும் கட்சிக்கு தாவுவது பற்றிய கதைகள் வெறும் கதைகள் மாத்திரமா அல்லது தேர்தல் தொடர்பில் அறிவித்தல்கள் விடுக்கப்பட்டவுடன் இந்த மாற்றங்கள் இடம்பெறுமா என்பது சமூக ஆர்வலர்கள் மத்தியில் காணப்படும் கருத்து.

இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலுக்கு முன் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத்தேர்தல் அறிவிப்பு வந்தால் தற்போதைய ஆளும் தரப்பிலிருந்து சஜித் தலைமையிலான கூட்டணியில் 45 பேர் இணைவார்கள் என செய்திகள் அண்மையில் வெளியாகியிருந்தன.

நாடாளுமன்றத் தேர்தலில் ராஜபக்சக்களின் மொட்டுக் கட்சியில் போட்டியிட்டால் தோல்வி கிடைக்கும் என்ற அச்சம் காரணமாகவே அவர்கள் சஜித் கூட்டணியில் இணைவார்கள் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும், முதலில் ஜனாதிபதித் தேர்தல் இடம்பெற்றால் இந்த நிலைமை தலைகீழாக மாறும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

CATEGORIES
Share This