அதிக மக்கள் எந்த மே தினக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்?: 5000 ரூபா வழங்கி அழைத்துவரப்பட்ட ஆதரவாளர்கள்
உலகத் தொழிலாளர் தினம். தொழிலாளர்களுக்காக கொண்டப்படப்படும் ஒரு தினம். நீண்டகாலத்துக்கு பின்னர் கொழும்பில் மக்கள் வெள்ளத்தில் பல மே தின நிகழ்வுகள் இடம்பெற்றன.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல், கொவிட் தொற்று, பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளால் கடந்த 4 வருடங்களாக மே தின கூட்டங்களை திட்டமிட்டப்படி அரசியல் கட்சிகளால் நடத்த முடியவில்லை.
இலங்கையில் இன்னமும் அரசியல் கொந்தளிப்புகள் உள்ள போதிலும் இந்த ஆண்டு தேர்தல் ஆண்டாக இருப்பதால் கட்சிகள் அனைத்தும் தங்கள் மே தினக் கூட்டங்களை பிரமாண்டமாக நடத்தின.
நான்கு பிரதான அரசியல் சக்திகளான ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி ஆகியன கொழும்பை மையப்படுத்தி தமது மே தினக் கூட்டங்களை நடத்தியதுடன், பலாயிரக்கணக்கான மக்களையும் இந்தக் கூட்டங்களில் பங்குபெற செய்தன.
இந்தக் கூட்டங்களில் எவரது மே தினக் கூட்டத்தில் அதிகமான மக்கள் கலந்துகொண்டனர் என்பதே தற்போது பேசுபொருளாக உள்ளது.
வெளியாகியுள்ள சில அறிக்கைகளில் பிரகாரம் எந்தவொரு கட்சியின் மே தினக் கூட்டத்திலும் இலட்சக்கணக்கான மக்கள் கலந்துகொள்ளவில்லை.
தேசிய மக்கள் சக்தியின் கூட்டத்தில் 35ஆயிரத்துக்கும் அதிகமானவர்களும், ஐக்கிய மக்கள் சக்தியின் கூட்டத்தில் 35ஆயிரம் பேர்வரையிலும் கலந்துகொண்டுள்ளதாகவும் ஏனைய இரண்டு பிரதான கட்சிகளின் கூட்டத்தில் 10ஆயிரம் வரையான மக்கள் கலந்துகொண்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை, சில கட்சிகள் 5000 ரூபா நிதியை வழங்கியே மே தினக் கூட்டத்துக்கு ஆதரவாளர்களை அழைத்துவந்துள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகனேசன் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக ஆளுங்கட்சிகளான ஐ.தே.கவும் பொதுஜன பெரமுனவுமே அதிகளவான நிதியை செலவழித்து மக்களை தமது கூட்டங்களுக்கு அழைத்துவந்துள்ளதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
கொழும்பை தவிர மாத்தறை, அநுராதபுரம், யாழ்ப்பாணம் உள்ளிட்ட நகரங்களில் தேசிய மக்கள் சக்தி மே தினக் கூட்டங்களை நடத்தியிருந்தது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டிருந்தமையும் சுட்டிக்காட்டத்தக்கது.