சகல வேட்பாளர்களும் வெள்ளிக்கிழமைக்குள் செலவு விபரங்களை சமர்ப்பிக்க வேண்டும்

சகல வேட்பாளர்களும் வெள்ளிக்கிழமைக்குள் செலவு விபரங்களை சமர்ப்பிக்க வேண்டும்

பொதுத்தேர்தலில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் பிரச்சார செலவினம் தொடர்பான விபரங்களை எதிர்வரும் வெள்ளிக்கிழமை நள்ளிரவுக்குள் சமர்ப்பித்தல் வேண்டும். குறித்த காலப்பகுதிக்குள் தகவல்களை சமர்ப்பிக்காவிடின் சட்டவிரோத செயலை புரிந்ததாக கருதப்பட்டு உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

2023 ஆம் ஆண்டின் 3 ஆம் இலக்க தேர்தல் செலவினங்களை ஒழுங்குப்படுத்தல் சட்டத்தின் பிரகாரம் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்கள், வேட்பாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்திய கட்சிகளின் செயலாளர்கள் மற்றும் சுயேச்சைக் குழுக்களின் தலைவர்கள் தமது வருமான செலவின விபரத் திரட்டுக்களை வெவ்வேறாகத் தயாரித்து எதிர்வரும் வெள்ளிக்கிழமை (06) நள்ளிரவு 12 மணிக்கு அல்லது அதற்கு முன்னர் அந்தந்த வேட்பாளர்கள் போட்டியிட்ட மாவட்டங்களின் தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கும், தேசிய பட்டியல் வேட்பாளர்கள் தேர்தல்கள் செயலகத்துக்கும் ஒப்படைத்தல் வேண்டும்.

அதேபோல் அந்த வேட்பாளர்களுக்கு, வேட்பாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்திய கட்சிகளின் செயலாளர்களுக்கு மற்றும் சுயேச்சைக் குழுக்களின் தலைவர்களுக்கும் தேசியப் பட்டியல் வேட்பாளர்களுக்கும் தேர்தல் வருமான செலவின விபரத் திரட்டுக்களை ஒப்படைக்கக்கூடிய வகையில் பொதுவான கடமை நேரங்களில் பி.ப. 6 மணி வரையும்,எதிர்வரும் வெள்ளிக்கிழமை (6) நள்ளிரவு 12 மணி வரையும் அனைத்து மாவட்டங்களின் தேர்தல் வருமான செலவின விபரத் திரட்டுக்களைக் கையேற்கும் விசேட அலகுகளைத் திறந்து வைப்பதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

2023 ஆம் ஆண்டின் 3 ஆம் இலக்க தேர்தல் செலவினத்தை ஒழுங்குப்படுத்தல் சட்டத்தின் 8 (அ) பிரிவுக்கமைய எதிர்வரும் வெள்ளிக்கிழமை (6) நள்ளிரவு 12 மணிக்கு அல்லது அதற்கு முன்னர் தேர்தல் செலவின விபரத்திரட்டுக்களை ஒப்படைக்காதிருப்பதன் ஊடாக சட்டவிரோதமான ஒரு செயலைப் புரிந்த குற்றத்துக்கு ஆளாகுவதுடன், அது குறித்து தேர்தல் செலவினத்தை ஒழுங்குப்படுத்தல் சட்டத்துக்கமைய சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

CATEGORIES
Share This