போலி ஆவணங்கள் மூலம் மோட்டார் சைக்கிள் விற்பனை செய்த மோசடி கும்பல் கைது
இறக்குமதி செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள் உதிரி பாகங்களை சேகரித்து மோட்டார் சைக்கிள்களை செய்து போலி ஆவணங்கள் மூலம் விற்பனை செய்யும் மோசடி கும்பலை ஊழல் தடுப்புப் பிரிவினர் நேற்று கைது செய்துள்ளனர்.
இந்த மோட்டார் சைக்கிள்கள் ஜப்பானில் தயாரிக்கப்பட்டதை குறிக்கும் போலி ஆவணங்கள் மூலம் விற்பனை செய்யப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.
குருநாகல், வாரியபொல, மாஸ்பொத்த, நாத்தாண்டிய ஆகிய பகுதிகளில் மோட்டார் சைக்கிள்கள் விற்பனை செய்யும் 4 நிலையங்களிலும் நேற்று சோதனை நடத்தப்பட்டு 20 கோடி ரூபா பெறுமதியான 45 மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த வாகன கடத்தலில் சிக்கி, வாங்கிய மோட்டார் சைக்கிள்களை பதிவு செய்ய முடியாமல் பொதுமக்கள் செய்வதறியாது தவிப்பதாக பொலிஸார் கூறுகின்றனர்.
மோட்டார் சைக்கிள் ஒன்று 3-5 இலட்சம் வரையிலான விலையில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
கைப்பற்றப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் மேலதிக விசாரணைகளுக்காக விற்பனை நிலையத்திற்கு சொந்தமான வாரியபொல மற்றும் குருநாகல் பொலிஸ் நிலையங்களில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.