சிங்களவர்களுக்கு ஒரு நீதியும் தமிழர்களுக்கு மற்றுமொரு நீதியும்
ஈழத்தமிழர்களு்ககு எதிரான யுத்ததில் இலட்சக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர். யுத்தம் நிறைவடைந்து 15 ஆண்டுகளை நெருங்கியுள்ள தருணத்தில் இன்னமும் தமிழ் இனப்படுகொலைக்கான நீதி கிடைக்கவில்லை.
தமிழின அழிப்புக் குறித்து நீதியான சர்வதேச மத்தியஸ்துடனான விசாரணையொன்று அவசியமென கடந்த ஒன்றரை தசாப்தமாக இலங்கைத் தீவில் இருந்தும் புலம்பெயர் தேசங்களில் இருந்தும் தமிழர்கள் மன்றாடி வருகின்றனர்.
1,50,000 இலட்சம் பேர் கொல்லப்பட்டனர்
ஆனால், சர்வதேசத்தின் கண் இன்னமும் திறக்கப்படவில்லை. இறுதி யுத்தத்தில் 40ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என ஐக்கிய நாடுகளின் விசாரணை அறிக்கை மற்றும் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கைகளில் வெளிப்படுத்தப்பட்டிருந்தன.
என்றாலும், இறுதி யுத்தத்தில் 1,50,000 இலட்சம் பேர்வரை கொல்லப்பட்டுள்ளதாக ஆதராங்கள் மற்றும் சாட்சியங்களுடன் கூடிய சில அறிக்கைகளும் ஐ.நாவில் முன்வைக்கப்பட்டுள்ளன.
என்றாலும், ஐ.நா. உட்பட சர்வதேச அமைப்புகளின் அறிக்கைகளை நிராகரித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவால் நியதிக்கப்பட்ட பரணகம விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் 7500 பேர்வரையே இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்டதாக கூறப்பட்டது.
அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்கியிருக்கவில்லை
2013ஆம் ஆண்டில் பரணக ஆணைக்குழு நியமிக்கப்பட்டது. இந்த அறிக்கை 2015 இல்தான் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. என்றாலும், இந்த ஆணைக்குழுவின் விசாரணைகளில் தமிழ் மக்கள் வழங்கிய சாட்சியங்கள் எதுவும் அறிக்கையில் பிரதிபலிக்கவில்லையென சாட்சியங்கள் வழங்கிய பலர் குற்றச்சாட்டுகளை முன்வைத்ததுடன், முழுமையாக பக்கச்சார்பான அறிக்கையாக இது இருந்ததாகவும் கூறினர்.
2009 முதல் 2015ஆம் ஆண்டுவரை இறுதி யுத்தம் தொடர்பிலான எவ்வித விசாரணைகளுக்கும் இலங்கை அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்கியிருக்கவில்லை. அதேபோன்று வடக்கு, கிழக்கில் இருந்த அனைத்து சாட்சியங்களையும் அரசாங்கம் அழிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டிருந்ததாக பரவலான குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டன.
ஐ.நா.வில் 30/1 கீழ் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
இலங்கை மேற்கொண்ட எந்தவொரு விசாரணைகளிலும் தமிழ் மக்களுக்கு நம்பிக்கையிருக்கவில்லை. அதனால்தான் சர்வதேச மத்தியஸ்தத்துடனான விசாரணையை தமிழர்கள் தொடர்ச்சியாக கோரிவந்தனர்.
அத்தகைய பின்புலத்தில்தான் 2015ஆம் ஆண்டு இலங்கையில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டது. அதன் பின்னர் இலங்கை அரசாங்கத்தின் இணை அணுசரனையுடன் ஐ.நா.வில் 30/1 கீழ் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
என்றாலும், நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்திலும் சர்வதேச மத்தியஸ்தத்துடனான விசாரணைகளுக்கு இணக்கப்பாடுகள் எதுவும் எட்டப்படவில்லை. இவ்வாறு ஒன்றரை தசாப்தங்கள் கடந்தும் ஈழத்தமிழர்கள் மீதான இனப்படுகொலைக்கு நீதி கிடைக்கவில்லை.
சர்வதேச விசாரணையை கோரும் சிங்களத் தலைவர்கள்
சர்வதேச மத்தியஸ்தத்துடனான விசாரணையை கோரும் தமிழர்களின் கோரிக்கைகளை தென்னிலங்கையின் அரசியல்வாதிகள் நிராகரித்திருந்தனர். மாறாக உள்ளக விசாரணையின் ஊடாகவே தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கும் என்றும் வலியுறுத்தினர்.
தமிழர்களுக்கான நீதி மெல்ல மெல்ல நீர்த்துப்போகின்ற சூழலில் உயிர்த்த ஞாயிறுதின தாக்குதல்கள் தொடர்பிலான சர்வதேச விசாரணையின் அவசியத்தை பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் உட்பட இலங்கைவாழ் கத்தோலிக்க மக்களும், கத்தோலிக்க அரசியல்வாதிகளும் கோரி வருகின்றனர்.
உயிர்த்த ஞாயிறுதின தாக்குதல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணையை கோருபவர்கள் சிங்களத் தலைவர்களாக உள்ளனர்.
அதற்கு ஆதரவளிக்கும் வகையில் நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் கருத்து வெளியிட்ட எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஐக்கிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தில் உயிர்த்த ஞாயிறுதின தாக்குதல்கள் தொடர்பில் சர்வதேச மத்தியஸ்துடனான விசாரணைகள் மேற்கொள்ளப்படும் எனவும் விசாரணை ஆணைக்குழுவில் சர்வதேச நீதிபதிகள் உள்வாங்கப்படுவார்கள் என்றும் கூறியுள்ளார்.
செவிடன் காதில் ஊதிய சங்கு
பல ஆண்டுகளாக இன அழிப்புக்கான நீதியை கோரும் தமிழர்கள் விடயத்தில் வாய்திறக்காத சஜித், தெற்கில் ஒரு சம்பவம் இடம்பெற்றால் அதனை அரசியல் இலாபத்துக்காக தமக்கு சாதகமாக்கிக்கொள்ளும் வகையில் கருத்துகளை வெளிப்படுத்துகிறார்.
தமிழ் இனப்படுகொலைக்கான நீதி சர்வதேச அரங்கில் கோரப்படும் சந்தர்ப்பங்களில் இவர் இதுகுறித்து வாய்திறக்கவில்லை.
இன்று தேர்தலொன்று நெருங்கிவரும் சூழலில் கத்தோலிக்க மக்களின் ஆதரவை தம்பக்கம் ஈர்க்க சர்வதேச விசாரணையின் அவசியத்தை கூறுகிறார்.
உயிர்த்த ஞாயிறுதின தாக்குதலில் உயிரிழந்தவர்களில் பெரும்பான்மையானவர்கள் தமிழர்களாக உள்ள போதிலும், இது சிங்கள மக்களின் பிரச்சனையாக தெற்கில் உருவெடுத்துள்ளதால் சர்வதேச விசாரணைக்கு அவர் ஆதரவு தெரிவிக்கிறார்.
தமிழ் மக்களின் வாக்குகளை மாத்திரம் எதிர்பார்க்கும் சஜித் உட்பட தென்னிலங்கை அரசியல் தலைவர்கள் தமிழர்களுக்கான நீதியென்று வரும்போது செவிடன் காதில் ஊதிய சங்கு போன்று போன்று மௌனமாக இருக்கின்றனர்.
தமிழ் அரசியல் தலைமைகள் எவ்வாறு செயல்பட வேண்டும்?
இலங்கையில் தீவில் தமிழ் மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டால் ஒரு நிதியும், சிங்கள மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டால் ஒரு நீதியும் வேண்டுமென கோரப்படுவதில் உள்ள நியாயம் என்னவென யுத்ததால் பாதிக்கப்பட்டு உறவுகளையும் உடமைகளையும் இழந்த தமிழ் மக்கள் கோருகின்றனர்.
இதனால்தான் தமிழ் பொது வேட்பாளர் ஒருவர் காலத்தின் அவசியம் என்பதை வடக்கு, கிழக்கு தமிழர்கள் உட்பட இலங்கைத் தீவில் வாழும் ஒட்டுமொத்த தமிழர்களும் கோருகின்றனர்.
தமிழர்களுக்கான நீதி மற்றும் தமிழ்த் தேசியப் பிரச்சினையை நீதித்துப்போகவிடாது சர்வதேச கவனத்தை ஈர்ப்பதற்கான அடுத்தக்கட்டத்துக்கு கொண்டுசெல்ல வேண்டியது உணர்ந்து தமிழ் அரசியல் தலைமைகள் செயல்பட வேண்டியதும் காலத்தின் கட்டாயமாகும்.