தமிழ் மக்களுக்கு தீர்வைத் தாருங்கள் பல்லாயிரம் கோடி முதலீடுகள் வரும்

தமிழ் மக்களுக்கு தீர்வைத் தாருங்கள் பல்லாயிரம் கோடி முதலீடுகள் வரும்

ஊழல் ஒழிப்பிற்கும் இலஞ்ச ஒழிப்பிற்கும் நிர்வாக ஒழுங்குமுறைக்கும் ஆதரவளிப்பதை தென்னிலங்கை அரசியல் சமூகம் பார்த்துக்கொள்ளட்டும். நாம் எமது உரிமைகளை வென்றெடுப்பதற்காக பாராளுமன்றத்தில் குரல்கொடுக்கக்கூடிய ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் சங்கு சின்னத்திற்கு வாக்களித்து வெற்றிபெற வைக்க வேண்டுமென ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் யாழ் மாவட்ட வேட்பாளரான சுரேஷ் பிரேமச்சந்திரன் வேண்டுகோள் விடுத்தார்.

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியில் சங்கு சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்தும் தனக்கும் விருப்பு இலக்கம் 1இல் வாக்களிக்குமாறும் யாழ்ப்பாணத்தில் சண்டிலிப்பாயில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு பேசுகையிலேயே இந்த வேண்டுகோளை விடுத்த

அவர் தொடர்ந்தும் பேசுகையில்,

இலங்கையில் ஏறத்தாழ 35 வருடம் உள்நாட்டுப் போர் என்ற போர்வையில் தமிழ் மக்கள் மீது மூர்க்கத்தனமான இராணுவ தாக்குதல்கள் நடத்தப்பட்டன . இதில் இராணுவ தரப்பிலும் போராளிகள் தரப்பிலும் பொதுமக்கள் தரப்பிலுமாக பல இலட்சம் பேர் கொல்லப்பட்டனர். 2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவிற்கு வந்தது.

கடந்த 35 வருட காலத்தில் இந்த நாடு பாரிய அழிவுகளைச் சந்தித்தது மாத்திரமல்லாமல் பாரிய பொருளாதாரப் பின்னடைவுகளையும் சந்தித்தது. அப்பொழுதெல்லாம் தமிழர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட யுத்தத்தைக் காரணம் காட்டி ஆட்சியாளர்கள் சிங்கள மக்கள் கிளர்ந்தெழாதவாறு அவர்களின் கைகளையும் வாயையும் கட்டிப்போட்டிருந்தனர்.

இப்பொழுது இலங்கை வங்குரோத்து அடைந்த நாடாக அறிவிக்கப்பட்டுள்ளது. பல்லாயிரம்கோடி கடன்கள் வெளிநாடுகளுக்குச் செலுத்த வேண்டியுள்ளது. அதே அளவு கடன்கள் உள்நாட்டிலும் செலுத்த வேண்டியுள்ளது. ஆனால் முன்னர் இருந்த ஆட்சியாளர்களும்சரி இப்பொழுது வந்திருப்பவர்களும் சரி இந்தப் பொருளாதார பின்னடைவுகளுக்கான சரியான மூலம் எதுவென்பதை வெளியில் சொல்வதற்கு இன்னமும் தயாராகவில்லை.

இப்பொழுது வந்திருக்கக்கூடிய ஜனாதிபதியும் பிரதமரும் தேசிய மக்கள் சக்தி என்றிருக்கக்கூடிய ஜனதா விமுக்தி பெரமுனவின் கூட்டணயில் உள்ளவர்களும் இந்த நாட்டில் ஊழல், இலஞ்சம், நிர்வாக சீர்கேடுகள்,வீண்விரயச் செலவுகள் இவைகள்தான் இந்த வங்குரோத்து நிலைக்குக் காரணம் எனக்கூறி உண்மையைப் பூசிமெழுக முற்படுகின்றனர்.

ஊழல், இலஞ்சம், நிர்வாக சீர்கேடுகள் போன்றவற்றிற்கு முழுமையான காரணகர்த்தாக்களாக இருப்பவர்கள் கடந்த காலங்களில் ஆட்சி செய்த சிங்கள அரசாங்கங்களும் அவர்களின் நம்பிக்கைக்குரிய நிர்வாகிகளும்தான்.

தமிழ் மக்களுக்கு அரசாட்சியும் கிடையாது. நிர்வாகமும் கிடையாது. வடக்கு-கிழக்கிலுள்ள நிர்வாகங்களும் கொழும்பினாலேயே ஆட்டிப்படைக்கப்படுகின்றன.

இவ்வாறான ஒரு சூழ்நிலையில் தமிழ் மக்களின் பொருளாதாரம் வளர்ச்சியடைய வேண்டுமாக இருந்தால் தமிழ் மக்களின் கைகளில் அதிகாரங்கள் முழுமையாகக் கிடைக்கப்பெற வேண்டும். ஆனால் முன்னைய அரசாங்கங்களும் சரி இப்பொழுது வந்திருப்பவர்களும்சரி தமிழ் மக்களுக்கான அதிகாரங்களை வழங்குவதில் பின்நிற்கிறார்கள்.

இலங்கையின் பொருளாதாரம் முன்னோக்கிச் செல்ல வேண்டுமாக இருந்தால் தமிழ் மக்களுக்கான ஆட்சி அதிகாரங்கள் பகிரப்படவேண்டும். எமக்கான ஆட்சி அதிகாரங்கள் பகிரப்படுகின்றபொழுது புலம்பெயர் தமிழ் மக்களிடமிருந்து பல்லாயிரம்கோடி முதலீடுகள் வருவதுடன் எமது அண்டை நாடான இந்தியா குறிப்பாக தமிழகத்து தொழிலதிபர்களும் கூட இங்கு முதலீடுகளை மேற்கொள்ள முன்வருவார்கள். அதன் மூலம் ஏற்படுகின்ற வடக்கு கிழக்கின் வளர்ச்சி என்பது ஒட்டுமொத்த இலங்கைக்கும் பாரிய நன்மைகளை ஏற்படுத்தும்.

வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும். சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்கும். தொழிற்சாலைகள் அதிகரிக்கும். தொழில்நுட்பக் கல்வி உட்பட கல்விமுறையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படும். ஆகவே இப்பொழுது பதவியில் இருக்கின்ற ஜனாதிபதியும் வரவிருக்கின்ற புதிய அரசாங்கமும் இவற்றை ஆழமாக ஆலோசித்து தமிழ் மக்களுடன் அதிகாரங்களைப் பகிர்ந்துகொள்ள முன்வரவேண்டும்.

இந்த விடயங்கள் தொடர்பாக புதிய அரசாங்கத்துடன் பேசக்கூடிய வல்லமையுள்ள இவைபற்றி தெளிவான சிந்தனையுள்ள சரியான உறுப்பினர்களைத் தெரிவுசெய்து பாராளுமன்றம் அனுப்பவேண்டும். அதற்கு ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் சங்கு சின்னத்திற்கு வாக்களித்து அதிகளவிலான பாராளுமன்ற உறுப்பினர்களை தமிழ் மக்கள் தெரிவு செய்ய வேண்டும் என்றார்.

CATEGORIES
Share This