நல்லூர் ஆலய சூழல் துப்பாக்கி சூடு நடாத்தி விளையாடும் திடல் இல்லை: நீதிபதி இளஞ்செழியன்

நல்லூர் ஆலய சூழல் துப்பாக்கி சூடு நடாத்தி விளையாடும் திடல் இல்லை: நீதிபதி இளஞ்செழியன்

நல்லூர் ஆலய சூழல் துப்பாக்கி சூடு நடாத்தி விளையாடும் திடல் இல்லை என வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் தனது சாட்சியத்தின் போது குறிப்பிட்டுள்ளார்.

மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனின் மெய்ப் பாதுகாவலர் சுட்டுக்கொல்லப்பட்டமை தொடர்பிலான வழக்கு விசாரணை இன்று யாழ்ப்பாண மேல் நீதிமன்றில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

குறித்த வழக்கு யாழ்ப்பாணம் நீதிமன்ற வளாகத்தில் அமைந்துள்ள மேல் நீதிமன்றத்தில் மேல் நீதிமன்ற நீதிபதி டி.எஸ்.சூசைதாஸன் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

2017ம் ஆண்டு யூலை 22ஆம் திகதி நல்லூர் சந்தியில் வைத்து யாழ் மேல் நீதிமன்ற நீதிபதியாக இருந்த மாணிக்கவாசகர் இளஞ்செழியன் மீதான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் போது நீதிபதியின் மெய்ப்பாதுகாவலர் ஓருவர் சுட்டுக் கொல்லப்பட்டதுடன் மற்றைய பாதுகாவலர் படுகாயமடைந்தார்.

இது தொடர்பான வழக்கு இன்று எடுத்துக்கொள்ளப்பட்ட போது சாட்சிகள் நெறிப்படுத்தப்பட்டதுடன், தனது மெய்ப்பாதுகாவலர் எதிரிக் கூண்டில் நிற்கும் எதிரியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார் என்று சாட்சியாளரான மா.இளஞ்செழியன் அடையாளம் காண்பித்தார்.

நீதிபதியின் சாட்சியம் நிறைவுற்றதை அடுத்து, நீதிபதி பலத்த பாதுகாப்புடன், நீதிமன்ற வளாகத்தை விட்டு வெளியேறினார்.

குறித்த வழக்கு விசாரணைகள் நாளைய தினம் வெள்ளிக்கிழமை வரை தொடர்ச்சியாக மூன்று தினங்கள் யாழ்.மேல் நீதிமன்றில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
Share This