அரவிந்த் கேஜ்ரிவால் கைதாக வாய்ப்பு?

அரவிந்த் கேஜ்ரிவால் கைதாக வாய்ப்பு?

டெல்லியில் புதிய மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பாக ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு அமலாக்கத் துறை 3 முறை சம்மன் அனுப்பிய நிலையிலும் அவர் விசாரணைக்கு ஆஜராகாததால் இன்று (04) அவர் கைது செய்யப்படலாம் என்று அக்கட்சியினர் அச்சம் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக புதன் பின்னிரவில் எக்ஸ் சமூகவலைதளத்தில் கருத்திட்ட டெல்லி சட்டம், பொதுப்பணித் துறை அமைச்சர் அதிஷி, “நாளை (05) காலை டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தலாம் எனத் தகவல்கள் கிடைத்துள்ளது. கைது செய்யப்பட வாய்ப்புள்ளது” என்று குறிப்பிட்டிருந்தார். அதேபோல் டெல்லி சுகாதார அமைச்சர் சவுரவ் பரத்வாஜ் நேற்றிரவு 11.52 மணிக்கு பதிவு செய்த ட்வீட்டில், “நாளை (05) காலை முதல்வர் வீட்டில் அமலாக்கத் துறை ரெய்டு நடத்துகிறது. கைது செய்யப்பட வாய்ப்பு” என்று பதிவிட்டுள்ளார். இதுபோல் அக்கட்சிப் பிரமுகர்கள் பலரும் இதே அச்சத்தை வெளிப்படுத்தி சமூகவலைதளங்களில் கருத்துகளைப் பகிர்ந்துள்ளனர். இந்நிலையில், முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் வீட்டின் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அவர் வீடு இருக்கும் பகுதியில் உள்ள சாலைகள் காவல் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளதாக கட்சி வட்டாரம் தெரிவிக்கின்றது. மற்றொருபுறம் ஆம் ஆத்மி அலுவலகம் முன் கட்சித் தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். கட்சி முக்கியப் பிரமுகர்களும் அங்கே வரத் தொடங்கியுள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This