உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் 5 வருடங்கள்
இலங்கையில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பு நிகழ்ந்து இன்றுடன் ஐந்து ஆண்டுகள் பூர்த்தியாகின்றன. ஆனால் இதுவரை நீதி நிலைநாட்டப்படாதுள்ளதுடன், விசாரணைகளும் அதற்கான குழுக்களும் அமைத்து காலங்கடத்தப்பட்டுள்ளது.
கொழும்பில் கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயம், நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டிய புனித செபஸ்தியார் ஆலயம், கிழக்கு மாகாணத்தில் உள்ள சியோன் தேவாலயம் மற்றும் கொழும்பில் உள்ள மூன்று ஹோட்டல்கள் ஆகியவை தாக்குதல் நிகழ்த்தப்பட்ட இலக்குகளில் உள்ளடங்குகின்றன.
10 தற்கொலை குண்டுதாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் வெளிநாட்டவர்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 272 பேர் பலியானார்கள். 500க்கும் மேற்பட்டோர் காயங்களுக்கு உள்ளானார்கள். இது இலங்கையில் போருக்குப் பின்னர் இடம்பெற்ற மிகப் பாரிய அளவிலான படுகொலைச் சம்பவமாகும்.
சேதமடைந்த தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்கள் விரைவாக புனரமைக்கப்பட்டன. ஆனால், உயிர் பிழைத்த மற்றும் பாதிக்கப்பட்ட பல குடும்பங்களுக்கு இதுவரை மருத்துவ ரீதியான, உணர்வு ரீதியான மற்றும் நிதி ரீதியான உதவிகள் தேவைப்படுகிறது. அவர்களின் கண்ணீர், சோகம், வலி என்பன அவர்களின் வாழ்க்கை மீளக் கட்டமைதலை விட்டும் வெகு தொலைவில் இருப்பதை தற்போதும் காட்டி நிற்கின்றன.
ஐந்து ஆண்டுகளாக புலனாய்வாளர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் நீதித்துறை உட்பட்ட இலங்கை குற்றவியல் சட்டக் கட்டமைப்புக்கு தாக்குதல்களுக்குக் காரணமானவர்களை கைது செய்ய முடியவில்லை. பாதுகாப்புத் தரப்புக்கு சாட்சியமளிக்காமலேயே பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் மற்றும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் (IGP) ஆகியோர், அவர்களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். சட்டமா அதிபர் தாக்கல் செய்த ஏனைய குற்றவியல் வழக்குகள் இன்னும் நடந்து வருகின்றன.
அக்கறையுள்ள சில பொதுமக்களால் தாக்கல் செய்யப்பட்ட, முன்னாள் ஜனாதிபதி மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் ஆகியோர் தாக்குதல்களைத் தடுக்காதமைக்குப் பொறுப்பேற்க வேண்டும் என்ற அடிப்படை உரிமைகள் வழக்குகளில் அவர்கள் இழப்பீடு வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் இதுவரை நீதி நிலைநாட்டப்படவில்லை.
இவ்வாறான நிலையில், உயிர்த்த ஞாயிறு தற்கொலைத்தாக்குதல் இடம்பெற்று இன்று 5 வருடங்கள் பூர்த்தியாகின்ற நிலையில், குண்டுத் தாக்குல் சம்பவத்தில் பலியானவர்களின் ஆன்ம இளைப்பாற்றிக்கான விசேட ஆராதனைகள் கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தலம், நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டி புனித செபஸ்தியார் தேவாலயம் மற்றும் மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் இடம்பெறவுள்ளன.
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலின் 5ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகள் இன்றைய தினம் (21) நாடளாவிய ரீதியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் இன்று காலை 8.45 மணிக்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறு கொழும்பு மாவட்ட பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அனைவரையும் கேட்டுக்கொண்டுள்ளார்.
அத்தோடு, கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்தில் விசேட வழிபாடுகளும் இடம்பெறவுள்ளன. இந்த அஞ்சலி நிகழ்வையொட்டி நேற்றுப் பிற்பகல் 4 மணிக்கு கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்திலிருந்து ஆரம்பமாகிய அஞ்சலி ஊர்வலம் குண்டுத் தாக்குதலுக்கு இலக்கான கட்டுவாப்பிட்டி புனித செபஸ்தியார் தேவாலயத்தை சென்றடைந்து இரவு முழுவதும் செப வழிபாடுகள் இடம்பெற்றதுடன் இன்று காலை 8.30 மணியளவில் அங்கு விசேட வழிபாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
இதேவேளை, மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் பலியானவர்களை நினைவேந்தும் வகையில் காலை 8.30 மணி முதல் விசேட ஆராதனைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
அதேவேளை, நாடளாவிய ரீதியில் உள்ள தேவாலயங்களில் இன்றைய தினம் விசேட ஆராதனைகள் இடம்பெறவுள்ளன.
மேலும், மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில், உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்த மக்களுக்காக நீதி வேண்டி இன்று காலை 09.30 மணிக்கு மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்றலில் நடைபெறவுள்ள கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.