இலங்கையில் பொய்யான கருத்துக்கணிப்புகள்: அறிக்கைகளை மறுத்த ஐரோப்பிய ஒன்றியம்
இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் குறித்த கருத்துக்கணிப்பு தொடர்பான அண்மைய அறிக்கைகளை ஐரோப்பிய ஒன்றியம் மறுத்துள்ளது.
இலங்கையில் தேர்தல் கருத்துக்கணிப்பு கணக்கெடுப்பை நடத்தவில்லையென ஐரோப்பிய ஒன்றியம் (EU), தெரிவித்துள்ளது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்புடைய சமூக வலைத்தளங்களில் போலியான கருத்துக்கணிப்பு முடிவுகள் பரப்பப்படுவதைத் தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியம் தெளிவுப்படுத்தியுள்ளது.
அண்மையில், ஐரோப்பிய ஒன்றியத்தின் கருத்துக்கணிப்பின்படி, தேசிய மக்கள் சக்தி ஜனாதிபதித் தேர்தலில் முன்னிலை வகிப்பதாகவும், அதனைத் தொடர்ந்து ஐக்கிய மக்கள் சக்தி முன்னிலையில் இருப்பதாகவும் அதிகளவான சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டன.
இந்நிலையில் ஐரோப்பிய ஒன்றியம் கணக்கெடுப்பை நடத்தியதாக கூறப்படும் கூற்றுகள் முற்றிலும் தவறானவை என்பதை சுயாதீன மற்றும் பக்கச்சார்பற்ற உண்மைச் சரிபார்ப்பு இணையதளமான Fact Crescendo இன் விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளன.
உத்தியோகப்பூர்வ ஐரோப்பிய ஒன்றியக் கணக்கெடுப்பு எதுவும் இல்லை என்றும், சமூக ஊடகங்கள் மற்றும் சில சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல்கள் தவறாக வழிநடத்தப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.