இனவாத அரசாங்கத்துடன் அரச அதிகாரிகளும் இணைந்து மக்களை வெளியேற்ற முயற்சி
முல்லைத்தீவு மாவட்ட தமிழ் மக்களை மாவட்டத்தில் இருந்து வெளியேற்றுவதற்கு மாவட்டத்தின் அரசாங்க அதிகாரிகள் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுகிறார்களா என்ற சந்தேகம் எங்களிடம் மேலோங்கியுள்ளது. இதற்கு எதிராக மாவட்ட செயலகத்திற்கு முன்பாக சட்டி பானையுடன் போராட வேண்டிய நிலையில் இருப்பதாக வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் து. ரவிகரன் தொரிவித்தார்.
யாழ். ஊடக அமையத்தில் இடம் பெற்ற ஊடக சந்திப்பிலே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மகாவலி என்றால் தமிழர்களுக்கு மரணபொறி காரணம் முல்லைத்தீவு மாவட்டத்தில் 2018 ஆண்டு மாவட்ட செயலக புள்ளிவிபரத்தின் படி 2,199 ஏக்கர் காணி 625 பயனாளிகளுக்கு என்று மகாவலியால் அபகரிக்கப்பட்டுள்ளது. ஆனால் 2024 ஆண்டு இது 4 ஆயிரம் ஏக்கராக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. மகாவலியின் ஆக்கிரமிப்புக்குள் முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்கிளாய்,கொக்குத்தொடுவாய் கருவாட்டுகேணிநில் 6 கிராம அலுவலர் பிரிவுகள் அபகரிக்கப்பட்டுள்ளது.
இந்த காணிகள் இலங்கை சுதந்திரமடைந்ததற்கு முன்பிருந்தே தமிழர்களுடைய பூர்விக காணி என்பதற்கு தெளிவான உறுதிகள் ஆவணங்கள் இருக்கின்றன. இது மட்டுமன்றி 1984 ஆண்டு உதியமலை படுகொலை இடம்பெறுவதற்கு சில காலபகுதியில் விடுதலைப் புலிகள் நூளைந்து விட்டார்கள் என கூறி இப்பகுதி மக்களை கவச வாகனங்களில் வந்த இராணுவத்தினர் துரத்தினார்கள் அன்று வெளியேறிய மக்கள் 29 வருடத்திற்கு பின்னரே மிள்குடியேறினார்கள் இந்த விரட்டியடுப்பால் விவசாய செய்கைகள் முற்றாக பாதிக்கப்பட்டது. அந்த காலத்தில் இந்த நிலமானது இந்த மாவட்டத்திற்கு மட்டுமல்ல இலங்கை முழுவதற்குமே நெல் உற்பத்தியால் அரிசியை வழங்கி தன்னிறைவு கண்ட மாவட்டமாகும்.
இவ்வாறான நிலப்பரப்புகளை மகாவிலி என்ற பெயரில் ஆக்கிரமித்து விட்டு தமிழர்களை விரட்ட நினைப்பது எத்தகைய நியாயம். ஆட்சிக்குவரும் இனவாத அரசாங்கங்கள்தான் இத்தகைய முயற்சியை மேற்கொள்கிறார்கள் என்றால் மாவட்டத்திற்கு பெறுப்பு கூறவேண்டிய மாவட்ட செயலர், பிரதேச செயலர் அவர்களும் இந்த இனவாத அரசாங்கத்துடன் இணைந்து தமிழ்மக்களை துரத்தும் செயல்பாட்டில் இருக்கிறார்களா? சொந்த மண்ணிலிருந்து அகற்ற நினைக்கும் செயற்பாட்டிற்கு நாம் ஒரு போதும் அஞ்சமாட்டோம். எதிர்வரும் நாட்களில் முல்லைத்தீவு மாவட்ட செயலக முன்றலில் சட்டி பானைகளுடன் தொடர் போராட்டத்தில் ஈடுபடவேண்டியவர்களாக உள்ளோம். எனவே மகாவலி திட்டத்தை கைவிட்டு தமிழ்மக்களின் காணிகளை தமிழ்மக்களிடம் கையளிக்கும் வேலைத்திட்டத்தை முன்னேடுக்க வேண்டும் என்றார்.