கச்சதீவு விவகாரத்தில் மூக்கை நுழைக்கும் சீனா!
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான கச்சதீவு (Kachchatheevu) விவகாரம் தொடர்பில் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரின் (Jaishankar) அறிக்கை, தீவின் மீது இந்தியா முறையாக உரிமை கோரும் வாய்ப்பை எழுப்பியுள்ளதாக சீனாவின் அரச செய்தித்தாள் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
இந்திய கடற்றொழிலாளர்களுக்கு கச்சதீவை சுற்றியுள்ள கடற்பரப்பில் கடற்றொழிலில் ஈடுபடும் உரிமையை திரும்பக் கோரப்படும் என்ற எதிர்வையும் அவரின் அறிக்கை உருவாக்கியுள்ளதாகவும் குறித்த பத்திரிகை கோடிட்டு காட்டியுள்ளது.
இந்தநிலையில் இலங்கையின் (Sri Lanka) கடல் எல்லையில் அமைந்துள்ள கச்சதீவு உடன்படிக்கையை மீள்பரிசீலனை செய்ய வேண்டாம் என கொழும்பில் உயர் ஸ்தானிகர்களாக பணியாற்றிய முன்னாள் இந்திய இராஜதந்திரிகளான சிவசங்கர் மேனன் மற்றும் நிருபமா ராவ் ஆகியோர் எச்சரித்துள்ளதாக சீன செய்தித்தாள் சுட்டிக்காட்டியுள்ளது.
இத்தகைய நடவடிக்கை புதுடெல்லியின் (New Delhi) நம்பகத்தன்மையை பாதிக்கும். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எதிர்க்கட்சி அரசியல்வாதிகள், செய்தி ஆய்வாளர்கள் மற்றும் முன்னாள் இந்திய தூதர்கள் அரசாங்கத்தின் தற்போதைய நிலைப்பாட்டை ஏப்ரல் 19ஆம் திகதி நடைபெறவுள்ள தமிழகத் தேர்தலுடன் இணைக்கின்றனர்.
இந்திய கடற்றொழிலாளர்கள் இதன்போது ஆளும் பாரதிய ஜனதா கட்சி, காங்கிரஸ் உடன் இணைந்த தமிழகத்தின் ஆளும் கட்சியைக் குற்றம் சாட்டி வாக்குகளைப் பெற விரும்புவதாகத் தெரிகிறது.
இந்தியாவைச் சேர்ந்த கடற்றொழிலாளர்கள் பெரிய இழுவைப் படகுகளைப் பயன்படுத்தி தீவுக் கடற்பரப்பில் அதிகளவு மீன்களைக் கைப்பற்றுவது தங்கள் வாழ்வாதாரத்தை பாதித்ததாக இலங்கை கடற்றொழிலாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
எனினும், இந்திய கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டதற்கும் கச்சதீவுக்கும் நேரடித் தொடர்பு இல்லை என்று இந்தியாவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஒருவர் கூறியுள்ளார்.
இந்தநிலையில் தற்போது இந்தியா தனது கடற்றொழிலாளர்களை கட்டுப்படுத்துவதற்குப் பதிலாக, 1974ஆம் ஆண்டு ஒப்பந்தத்தின் மறுபரிசீலனைக்கான சாத்தியத்தை சமிக்ஞை செய்வதாகத் தோன்றுகிறது என்றும் சீன செய்தித்தாள் கூறியுள்ளது.