ஆசிரியர்களுக்கு பெற்றோர்களின் உருக்கமான வேண்டுகோள்!

ஆசிரியர்களுக்கு பெற்றோர்களின் உருக்கமான வேண்டுகோள்!

ஆசிரியர்களை நேரில் கண்ட தெய்வமாக பார்க்கின்றோம். உயிரோடு சேவை செய்யும் உன்னத பணி கிடைத்திருப்பது வரமேன்றே கூறவேண்டும். அப்பணியை மிக புனிதத்தோடு செய்யும் பெரும்தகைகளை மதிக்கின்றோம்.

வைத்தியர் உயிரை காப்பதற்காக போராடுகின்றவர். போராட்டம் வெற்றி பெற விட்டால் உயிர் உடலைவிட்டு பிரிந்துவிடும். பிரிந்த பிறகு அதன் வலி பிரிந்தவருக்கு தெரியாது. சுற்றத்தாருக்குத்தான் வேதனை. ஆசிரியரும் உயிரோடுதான் பணியை ஆரம்பிக்கின்றார். இப்பணியை சரியாக ஆசிரியர் செய்யாவிட்டால் பிள்ளை உயிர் இருந்தும் பிணமாகும். ஒவ்வொரு நொடியும் வலியோடுதான் பிள்ளைகள் வாழும். மரணித்த உயிரை விட வாழ்வோடு இருந்து அனுபவிக்கும் வலி சொல்லில் சொல்லிவிட முடியாது. கண்ணால் அப்பரிதாபத்தை பார்க்க முடியாது. அலுவலத்தில் வேலை சேவையோடு செய்வது. அதில் தவறு ஏற்பட்டால் கிழித்து விட்டு புதிய கோவையை உருவாக்கிவிடலாம். ஆனால் பிள்ளைக்கு தவறு இழைத்துவிட்டால் அதனை மாற்றிவிட முடியாது.

இவ்வாசிரிய பணியை விருப்போடு செய்து இன்றும் பிள்ளைகள் மத்தியில் வாழும் ஆசிரியர்களை மறந்து விடமுடியாது. இப்பணி சம்பளத்திற்காக நேரத்தை கடத்தும் பணி அல்ல.

இதனையே பிள்ளையை பெற்று பாடசாலைக்கு அனுப்பிய தாயின் மனகுமுறல் பேசுகின்றது –

“நான் தந்தை இல்லாது வளர்ந்தவள் அம்மாவின் அரவணைப்போடு வாழ்ந்தவள். இரண்டு வயதில் தந்தை இழந்ததால் தாயின் வேதனையை கஷ்டத்தை உணர்ந்தேன். பாடசாலையில் படிக்க விருப்பம். சூழல் அமையவில்லை. அதனால் என் பிள்ளையை படிப்பிக்க வேண்டும். என்பதற்காக பாடசாலை ஒன்றில் இணைத்துள்ளேன். பாடசாலையை மட்டுமே எனது பிள்ளை நம்பியுள்ளது. என்னைப்போல பலரின் பிள்ளைகளும் அப்படியே. பாடசாலையை மட்டும் நம்பாது வகுப்புக்கு பலர் அனுப்புகின்றனர். அவ்வாறு அனுப்புவதற்கு என்னிடம் வசதியில்லை.

பிள்ளைகள் ஆசிரியர்களையே போலக்கற்கின்றனர். அவர்கள் சொற்களை பாலர் பிள்ளைகள் வேதவாக்காக நம்புகின்றனர். அவர்களது நடை, உடை பாவனையை மாதிரியாக கொள்கின்றனர். இந்த நிலையில்தான் சமகாலத்தில் சேவையில் உள்ள ஆசிரியர்கள் ஒரு சிலர் நடந்து கொள்ளும் விதத்தினால் தம்பிள்ளை அனுபவிக்கும் கஷ்டத்தை கண்ணுற்று தாய் பேசும் வார்த்தைகள் தொடருகின்றன.

எல்லா அரச உத்தியோகத்தரையும் விட ஆசிரியர்களுக்கு விடுமுறை அதிகம் அதிலும் தற்கால சூழலில் 200க்கும் குறைவான நாட்களே பாடசாலை நடைபெறுகின்றது. அதில் 41 நாட்களும் எண்ணி விடுமுறை சிலர் எடுக்கின்றனர். அதற்குள்ளும் அலுவலகங்களால் நடாத்தப்படும் செயலமர்வு, கூட்டம் என்று வருடத்தில் குறைந்தது பத்து பதினைந்து நாட்களுக்கு மேல் கடமை விடுமுறையில் செல்கின்றனர். உடற்கல்வி ஆசிரியர்கள் இருபது நாட்களுக்கு மேலாவது செல்கின்றனர். இதைவிட படிக்கின்ற ஆசிரியர்கள் படிப்பு விடுமுறை என எடுக்கின்றனர். மொத்தமாக நான் எண்ட பிள்ளைக்கு படிப்பிக்கிற ஒரு ஆசிரியரிட விடுமுறையை பார்த்தா 70நாள் மட்டுல பாடசாலைக்கு வரமா இருந்திருக்கிறார். அப்படி பார்த்தா 130நாள்தான் பாடசாலைக்கு வந்திருக்கிறார். மொத்தமாக பார்த்தா நான்கு மாதம்தான் முழுமையான வேலை. எண்ட புருஷன் கூலி வேலை செய்றவர் காலையில போன மாலையிலதான் வருவார். அவ்வளவு நேரமும் வெயிலிலதான் வேலை. போகாட்டி சம்பளமும் வாராது. நேரத்தோடு வந்தா சம்பளமும் வெட்டுப்படும். ஆனா இவங்களுக்கு அப்படி இல்லை. இது அவங்க படிச்சதால அப்படி வாழ்கின்றாங்க. நம்ம படிக்காததால இப்படி கஷ்டப்படுறம். எல்லா ஆசிரியரும் இப்படி இல்லை விடுமுறை எடுக்காம விடுமுறை காலம் எண்டாலும் பாடசாலைக்கு போய் ஒவ்வொரு நாளும் வகுப்பு எடுக்கும் ஆசிரியரும் உள்ளாங்க அவங்கள எப்படி பாராட்டுற எண்டே தெரியல்ல.

பாடசாலைக்கு வரும் நேரம் சரியாக 7.28க்கு பிறகுதான் போற நேரம் 1.31ஆக இருக்கும் அப்படி இருந்தா பிள்ளைகளும் அவர்களைப்போல கற்றுக் கொள்கின்றனர். வந்தும் மற்ற ஆசிரியர்களோடு இருந்து கதைத்து இருப்பது. அதிபருக்கு எதிராக செயற்படுவது. பாடசாலையில் எட்டு பாடம் ஒரு நாளைக்கு ஒரு பாடத்தையும் முழுமையா கற்பிப்பது இல்லை. விளங்கப்படுத்துறதும் இல்லை. அத எழுது இத எழுது என்று சொல்லிப்போட்டு யாரைப்பற்றியாவது வேறு ஆசிரியர்களிடம் பேசிக்கொள்ளவது அதிபரை, அதிகாரிகளை கண்டால் படிப்பிப்பது போல நடிப்பது.

தொலைபேசியில் விளையாடிக் கொண்டு இருப்பது. கொப்பி திருத்துவது இல்லை. பாடசாலைக்கு வந்து தங்கட வேலைகளை செய்யிற. பிள்ளை புள்ளி குறைவு எடுத்தால் பிள்ளைகளை குறை கூறுவது. நேரத்தை கடத்துவது மட்டுமே எண்ணம். எந்த தயார்படுத்தலும் இல்லை. மாதம் முடிய சம்பளம் எடுக்க வேண்டும் இது மட்டும்தான் எண்ணம். தண்ட பிள்ளையை படிப்பிக்க எல்லா இடமும் கொண்டு போறது. தன்னை நம்பி வந்த பிள்ளைக்கு ஏமாற்றம் செய்றது. பிள்ளைகள் புள்ளிகள் எடுக்கல எண்டா ஆசிரியர்களின் சம்பளத்தை நிப்பாட்டனும் அப்பதான் பிள்ளைகளுக்கு ஒழுங்காக கற்பிப்பாங்க.

இண்டைக்கு ஒழுங்கான ஆசிரியர் இல்லாம எத்தின பிள்ளைகள் தினம் கஷ்டத்தை அனுபவிக்குது. அந்த பிள்ளைகளை அவ்வாறு உருவாக்கிவிட்ட ஆசிரியர்கள் எவ்வாறு கவலை இன்றி நடமாடுகின்றனர்.

கதிரையில் இருந்து கொண்டும் பாடசாலைக்கு விடுமுறையை எடுத்துக் கொண்டும் கலைத்திட்டத்தை பூர்த்தியாக்க முடியாது. இதனால் பாதிக்கப்படுவது எங்கள் பிள்ளைகள்தான் அவர்கள் பிள்ளைகள் இல்லை. ஆனாலும் இறைவன் ஒருவர் என்று உளோம் அவர்களின் பிள்ளைகளுக்கு அதன் பலன் வந்து சேரும்.

ஆசிரியர்தொழிலை நேசிப்பவர் அச்சேவையில் இருங்கள். சம்பளத்திற்காய் இத்தொழிலுக்கு வராதீர்கள். பிள்ளைகள் பாவம். பதினோரு வருடம் படித்த பிள்ளை சுற்றி இருக்கும் சுற்றத்தார் பெயரைக்கூட எழுத முடியாதவர்களாக வரும் அவலம் வேண்டாம். வகுப்பறைகளில் எழுத,வாசிக்க தெரியாத மாணவர்கள் என்று தொடர்ந்தும் இருக்கும் நிலை வேண்டாம். ஒரு நாளைக்கு ஒரு எழுத்தை சொல்லிக் கொடுத்திருந்தாலும் ஒரு வருடம் போதும் பிள்ளை வாசிப்பதற்கு. ஏன் பிள்ளைகள் மீது பொய்சாட்டு. உளத்தால், உடலால் பாதிப்பை எதிர்கொள்ளாத பிள்ளை எழுத, வாசிக்க தெரியவில்லை என்றால். யாரில் தவறு. வெற்றிடத்தை நிரப்ப ஒருவரை நியமிககாதீர்கள். நேசிக்கின்றவர்களுக்கு மட்டும் தொழிலை கொடுங்கள். என் பிள்ளைக்கு நடந்த அவலம் உங்கள் பிள்ளைக்கும் வேண்டாம்.

விரும்பி ஏற்றீர்களோ? விரும்பாமல் ஏற்றீர்களோ? தெரியவில்லை. பிள்ளைகளுக்கு துரோகம் செய்யாதீர்கள், நீங்கள் ஒருவர் விடுமுறை பெற்றால் எங்கள் பிள்ளைகள் 250பேர் பாதிப்பு அடைகின்றனர். அவசிய விடுமுறை தேவைதான் அதற்காக விடுமுறையை எண்ணி எடுக்காதீர்கள். இது எல்லா ஆசிரியர்களுக்குமான பதிவல்ல பணியை துஸ்பிரயோகம் செய்யும் ஒரு சிலருக்கான பதிவு மட்டுமே. காலையில் 7மணிக்கு முதல் சமூகம் கொடுத்து பின்னேரம் வகுப்பும் நடாத்தி எட்டு பாடங்களையும் படிப்பித்து வகுப்பறையில் ஆசிரியர் இல்லையாயின் அந்த வகுப்புகளுக்கும் சென்று கற்பிக்கும் பிள்ளைகளின் உயர்வுக்காய் செயற்படும் ஆசிரியர்களை தெய்வமாக மதிக்கின்றோம் போற்றுகின்றோம்.
-பாசமுள்ள பெற்றோரின் மனக்குமுறல்கள்

CATEGORIES
TAGS
Share This