ஒப்புகை சீட்டு எண்ணிய பிறகே தேர்தல் முடிவை அறிவிக்க வேண்டும்: திருமாவளவன் மனு
அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்களுடன் விவிபேட் கருவியை இணைத்து, ஒப்புகைச்சீட்டை முழுமையாக எண்ணிய பிறகே மக்களவைத் தேர்தல் முடிவை அறிவிக்க வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை, தலைமைச் செயலகத்தில் தலைமைத் தேர்தல் அதிகாரிசத்யபிரத சாஹூவை நேற்று சந்தித்தவிசிக தலைவர் திருமாவளவன், கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: டெல்லியில் இருந்து தலைமைத் தேர்தல் ஆணையர் சென்னை வந்தபோது அவரிடம் சமர்ப்பிப்பதற்காக விசிக சார்பில் கோரிக்கை மனுவை தயாரித்திருந்தோம். அப்போது அவரை சந்திக்க இயலவில்லை. அந்த கோரிக்கை மனுவை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூவை சந்தித்து அளித்துள்ளோம்.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்ய வாய்ப்பிருப்பதாக கட்சி சார்பற்ற அமைப்புகளால் அச்ச உணர்வு வெளிப்படுத்தப்படுகிறது. இன்றும் வடஇந்திய மாநிலங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
எனவே, அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்களுடன் விவிபேட் எனினும் ஒப்புகைச்சீட்டு கருவிகளையும் இணைக்க வேண்டும். அந்த சீட்டுகளை முழுமையாக எண்ணி தேர்தல் முடிவை அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளோம். விசிக சார்பில் கடந்த 2 மாதங்களில் 2 முறை மாநிலம் தழுவிய அளவில் ஆர்ப்பாட்டம் நடத்தி இருக்கிறோம்.
அதன் தொடர்ச்சியாக கோரிக்கையை வலியுறுத்தும் மனுவை வழங்கியுள்ளோம். தேர்தல் ஆணையர்களை தேர்வு செய்வதற்கான குழுவில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி இடம்பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளையும் வலியுறுத்தியுள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.