பாஜக உத்தேச வேட்பாளர் பட்டியலில் தமிழக பிரபலங்கள்!

பாஜக உத்தேச வேட்பாளர் பட்டியலில் தமிழக பிரபலங்கள்!

தமிழக பாஜக சார்பில் மக்களவைத் தேர்தலுக்கான உத்தேச வேட்பாளர் பட்டியல் கட்சி மேலிடத்தில் அளிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழக பாஜக பிரபலங்கள் பலர் இடம்பெற்றுள்ளனர். தமிழ்நாட்டில் 39 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இவை அனைத்திலும் பாஜக தலைமையிலான என்டிஏ போட்டியிடுகிறது. இதற்கான உத்தேச வேட்பாளர் பட்டியல், தமிழ்நாடு பாஜக மையக் குழுவினரால் புதன்கிழமை கட்சி மேலிடத்தில் அளிக்கப்பட்டுள்ளது.

இதற்காக, மையக்குழுவின் உறுப்பினர்களான மாநில பாஜக தலைவர் கே.அண்ணாமலை, மாநில அமைப்பு பொதுச் செயலாளர் கேசவ விநாயகம் உள்ளிட்டோர் டெல்லி வந்திருந்தனர். இப்பட்டியலில் பாஜக உறுதியாக வெல்லும் தொகுதிகளாக 10 தொகுதிகள் இடம் பெற்றுள்ளன.

தமிழக பாஜகவின் உத்தேசப் பட்டியலில் இடம்பெற்றுள்ள பிரபலங்கள் குறித்து கட்சியின் தேசிய நிர்வாகிகள் வட்டாரம் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் பகிர்ந்து கொண்டது. இதன்படி, இந்தப்பட்டியலில் பாஜக மாவட்டச் செயலாளர்கள் பலர் இடம் பெற்றுள்ளனர்.

2014 தேர்தலில் போட்டியிட்டு மத்திய அமைச்சரான பொன்.ராதாகிருஷ்ணன் பெயர் மீண்டும் கன்னியாகுமரியில் இடம் பெற்றுள்ளது. இதே தொகுதியை எதிர்பார்த்து பாஜகவில் இணைந்ததாக கருதப்படும் விஜயதரணியின் பெயரும் அதில் உள்ளது. அதிக பிரபலங்கள் பரிந்துரைக்கப்பட்ட தொகுதியாக கோயம்புத்தூர் உள்ளது.

இங்கு பாஜக தலைவர் அண்ணாமலை, தேசிய மகளிர் பிரிவின் தலைவர் வானதி சீனிவாசன், தொழில் அணியின் துணைத் தலைவர் செல்வகுமார் ஆகியோரின் பெயர்கள் உள்ளன. இவர்களில் அண்ணாமலையின் போட்டியால் பிற தொகுதிகளுக்கான பிரச்சாரக் கூட்டங்களில் அவர் பங்கெடுப்பது பாதிக்கும் நிலை உள்ளது. இதனால், அண்ணாமலையின் போட்டி உறுதி செய்யப்படவில்லை.

கோவை எம்ஏல்ஏவாக வென்றிருப்பதால் வானதிக்கும் இத்தொகுதி சாதகமாகப் பார்க்கப்படுகிறது. கோவையை அடுத்து சென்னை தொகுதிகளில் பாஜக பிரபலங்கள் அதிகம் உள்ளனர். தென் சென்னைக்கான பரிந்துரையில் தமிழக பாஜக துணைத் தலைவர்களான திருப்பதி நாராயணன், கரு.நாகராஜன் ஆகியோர் உள்ளனர். தமிழகத்தில் தென் சென்னையில் மட்டுமே பாஜகவுக்கு அதிக பிராமணவாக்குகள் உள்ளன.

இங்கு பாஜகவுக்கு சுமார் 2.5 லட்சம் பிராமண வாக்காளர்கள் உள்ளதாக கூறப்படுகிறது. பாஜகவின் உத்தேசப் பட்டியலில் இடம்பெற்ற ஒரே பிரபல பிராமணராக, நாராயணன் உள்ளார். தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தென் சென்னையில் போட்டியிடுவார் என பேசப்பட்டது. தற்போது இந்தப் பேச்சுகள் நின்று விட்டது எனினும் இவரது பெயரையும் அதிக தொண்டர்கள் உத்தேசப் பட்டியலுக்கு பரிந்துரைத்துள்ளனர்.

மத்திய சென்னைக்கு குஷ்பு மற்றும் வினோஜ் பி.செல்வம் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் குஷ்பு 2021 சட்டப்பேரவை தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்டு இரண்டாம் இடம் பெற்றார். இவர் திருப்பூர் அல்லது பொள்ளாச்சியில் போட்டியிட விரும்புவதாகத் தெரிகிறது. வட சென்னைக்கான பெயர்களில் மாநில துணைத் தலைவர் பால் கனகராஜ் இடம் பெற்றுள்ளார்.

இதுபோல் திருநெல்வேலிக்கான பெயர்களில் தமிழக பாஜக சட்டப்பேரவை கட்சித் தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளார். விருதுநகருக்கான போட்டியில் மாநிலப் பொதுச் செயலாளரான பேராசிரியர் னிவாசன் மற்றும் பாஜக மாவட்டச் செயலாளர் பாண்டுரங்கன் உள்ளனர்.

சிவகங்கையில், ஆன்மிகம் மற்றும் ஆலயங்கள் வளர்ச்சிப் பிரிவின் எம்.நாச்சியப்பனும் தென்காசியில் ஸ்ரீதர் வேம்புவின் நெருங்கிய சகாவானஸ்டார்ட்அப் அணியின் தலைவர் ஆனந்த் ஐயாசாமியும் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

தென்காசியில் ஆனந்தின் போட்டியை விரும்பாமல் தான் புதிய தமிழகம் டாக்டர் கிருஷ்ணசாமி , என்டிஏ-வில் இருந்து வெளியேறியதாக கூறப்படுகிறது. தூத்துக்குடிக்கான பெயர்களில் அதிமுகவிலிருந்து பாஜகவுக்கு வந்த சசிகலா புஷ்பா மற்றும் கே.எம்.ராதாகிருஷ்ணன் உள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This