அமீரகத்தில் இராணுவ மரியாதையுடன் மோடிக்கு உற்சாக வரவேற்பு!
ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்நாட்டு ராணுவ மரியாதையுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் ஜயத் அல் நஹ்யான் அபுதாபி விமான நிலையத்தில் பிரதமர் மோடியை வரவேற்றார்.
அதனைத் தொடர்ந்து அபுதாபியில் தனியார் விடுதிக்குச் சென்று இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்களை சந்தித்த அவர், அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். சிறுவர் சிறுமியர் கொண்டுவந்த புகைப்படங்களில் கையொப்பமிட்டு வாழ்த்தினார்.
முன்னதாக பிரதமர் மோடியை வரவேற்கும் விதமாக விடுதியில் பாடல் பாடி உற்சாகப்படுத்தப்பட்டது. அங்கிருந்த மக்கள் மோடி, மோடி எனக் கூச்சலிட்டு ‘பாரத் மாதாகி ஜே’ என முழக்கங்களை எழுப்பினர்.
ஐக்கிய அரபு அமீரக நாட்டுக்கு பெப்ரவரி 13,14 ஆகிய திகதிகளில் பிரதமர் நரேந்திர மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்தப் பயணத்தில் அந்நாட்டு அதிபா் ஷேக் முகமது பின் ஜயத் அல் நஹ்யானுடன் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளாா்.
மேலும், அபுதாபியில் புதிதாக கட்டப்பட்டுள்ள முதல் ஹிந்து கோயிலையும் அவா் திறந்து வைக்க உள்ளாா்.
கடந்த 2015-ஆம் ஆண்டுமுதல் தற்போது வரை ஐக்கிய அரபு அமீரகத்துக்கு பிரதமா் மோடி 7-ஆவது முறையாக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.