1.5 லட்சம் பேர் வேலையில்லாமல் உள்ளனர் – ராகுல் காந்தி
அக்னிபாத் திட்டம் தேசபக்தியுள்ள இளைஞர்களுக்கு இழைக்கப்பட்டுள்ள துரோகம் மட்டுமல்ல இந்திய ராணுவத்துடன் இணைக்கப்பட்டிருக்கும் நாட்டின் புனிதமான உணர்வுகளுக்கு இழைக்கும் துரோகம்” என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில், “ஆயுதப்படையில் ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட 1.5 லட்சம் இளைஞர்களை தற்காலிக ஆள்சேர்ப்பு அக்னிபாத் திட்டம் என்ற பெயரில் ஆதரவற்றவர்களாக விடப்பட்டுள்ளது அவர்களுக்கு இழைக்கப்படும் மாபெரும் அநீதியாகும். அக்னிபத் திட்டம் தேசபக்தியுள்ள இளைஞர்களுக்கு இழைக்கப்பட்டுள்ள துரோகம் மட்டுமல்ல இந்திய ராணுவத்துடன் இணைக்கப்பட்டிருக்கும் நாட்டின் புனிதமான உணர்வுகளுக்கு இழைக்கும் துரோகம்” எனப் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, பிஹார் மாநிலம், கதிகாரில் புதன்கிழமை தனது இந்திய ஒற்றுமை நீதி நடைபயணத்தின் போது ராணுவத்தில் சேர ஆர்வமுள்ள இளைஞர்களுடன் கலந்துரையாடலின் போது, “கடந்த 40-50 ஆண்டுகளில் வேலையின்மை விகிதம் அதிகமாக இருந்ததால் நாட்டில் பரவலாக வேலையில்லா திண்டாட்டம் நிலவுகிறது” என்று தெரிவித்தார். பிஹாரில் இருந்து மேற்குவங்கம் திரும்பிய அவருக்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அக்னிபாத் திட்டம்: ராணுவத்தில் இளைஞர்கள் தற்காலிகமாக பணி நியமனம் செய்யும் திட்டமாகவே இது கொண்டுவரப்பட்டது. அதாவது அக்னிபாத் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் இளைஞர்கள் ராணுவத்தில் நான்கு ஆண்டுகளுக்கு மட்டும் பணி செய்ய முடியும். 4 ஆண்டுகள் பணிக்காலம் முடிந்த பிறகு அவர்களுக்கு சேவை நிதி தொகுப்பு வழங்கப்படும். 17.5 வயதில் இருந்து 23 வயதுக்குள் இருப்பவர்கள் இத்திட்டத்தில் சேர முடியும். நான்கு ஆண்டுகளுக்கு பிறகு மதிப்பீடுகள் செய்யப்பட்டு தகுதியின் அடிப்படையில் 25 சதவீதம் பேர் ராணுவத்தில் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள். அக்னிபாத் திட்டத்தின் கீழ் தேர்வாகும் இளைஞர்கள் அக்னிவீரர்கள் என அழைக்கப்படுவார்கள்.