மட்டக்களப்பில் கால்நடை பண்ணையாளர்கள் போராட்டம்!

மட்டக்களப்பில் கால்நடை பண்ணையாளர்கள் போராட்டம்!

உலகமெங்கும் தமிழர்களினால் இன்று (16) பட்டிப்பொங்கல் சிறப்பாக அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது.

உழவுத்தொழிலுக்கு உதவும் கால்நடைகளுக்கு நன்றி செலுத்தும் இன்றைய பட்டிப்பொங்கல் நாளினை கரிநாளாக பிரகடனப்படுத்தி மயிலத்தமடு, மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் மேலாடையின்றி கைகளில் பொங்கல் பாணைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மட்டக்களப்பில் கால்நடை பண்ணையாளர்கள் பட்டிப்பொங்கல் தினத்தை கறுப்பு நாளாக அனுஷ்டித்து மயிலத்தமடு மேய்ச்சல் தரை மீட்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மட்டக்களப்பு நகரில் ஒன்றுகூடிய கால்நடை பண்ணையாளர்கள் இந்த போராட்டத்தினை முன்னெடுத்தனர்.

மயிலத்தமடு மாதவனை மேச்சல் தரை பண்ணையாளர்களின் அறவழிப் போராட்டம் 124 நாள் கடந்துள்ள நிலையில் 124 பொங்கல் பானைகளை கறுப்பு நாடா கட்டி அதனை தலைகளில் ஏந்தி கவனஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட கால்நடை பண்ணையாளர்கள் காந்திபூங்காவிலிருந்து மட்டக்களப்பு மாவட்ட செயலகம் வரையில் ஊர்வலமாக சென்று மாவட்ட செயலகத்திற்கு முன்பாக அமைதி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், இந்த போராட்டத்தில் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், கிழக்கிலங்கை இந்துக்குருமார் ஒன்றியம், மட்டக்களப்பிலுள்ள பண்ணையாளர்கள், விவசாய அமைப்பினர், மதத் தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது நீதிமன்ற உத்தரவினை நடைமுறைப்படுத்து, கால்நடைகளின் உயிரைப்பறிக்காதே, எமது நிலம் எமக்கு வேண்டும், மயிலத்தமடுமாதவனை எங்கள் சொந்த நிலம், சர்வதேசமே நீதியைப்பெற்றுக்கொடு, பண்ணையாளர்களின் வாழ்வாதாரத்தில் கைவைக்காதே போன்ற பல்வேறு கோசங்களும் எழுப்பப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்ட செயலகம் வரையில் அமைதியான முறையில் கால்நடை பண்ணையாளாகள் ஊர்வலமாக சென்ற நிலையில் மாவட்ட செயலகத்தின் முன்வாயில் கதவுகள் பொலிஸாருடன் மூடப்பட்டதுடன் பண்ணையாளர்கள் மாவட்ட செயலகத்திற்குள் செல்வதற்கு அனுமதிக்கப்படவில்லை.

இதன்போது மாவட்ட அரசாங்க அதிபர் பண்ணையாளர்கள் போராட்டம் நடைபெறும் இடத்திற்கு வருகைதந்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டதுடன் சிலரை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்தார்.

இதன்போது பண்ணையாளாகளின் வேண்டுகோளுக்கு அமைவாக மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரும் வரவழைக்கப்பட்டதுடன் மயிலத்தாடு, மடுமாதவனை பகுதியில் பொலிஸாரின் செயற்பாடுகள் குறித்து இங்கு ஆராயப்பட்டது.

பண்ணையாளர்களின் பிரச்சினைகளை ஆராய்ந்து அவர்களுக்கான தீர்வினை வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜே.முரளிதரன் இதன்போது தெரிவித்தார்.

CATEGORIES
TAGS
Share This