தலைமன்னாரில் இருந்து கடத்தப்பட்ட பல கோடி பெறுமதியான தங்கம் மீட்பு!
தலைமன்னாரில் இருந்து சட்டவிரோதமாக கடல் வழியாக தனுஷ்கோடிக்கு கடத்திச் செல்லப்பட்ட தங்கம் திருச்சி மத்திய நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
படகில் கடத்திச் செல்லப்பட்ட 7.70 கிலோ தங்கம் தங்கச்சிமடம் அடுத்த தர்கா பேருந்து நிலையம் அருகே வைத்து நேற்றிரவு (4) பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை கடத்தலில் ஈடுபட்ட நபர் அதிகாரிகளை தாக்கிவிட்டு தப்பிச் சென்ற நிலையில் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக தேடி வருகின்றனர்.
தனுஷ்கோடி கடல் பகுதி இலங்கைக்கு மிக அருகே இருப்பதால் இலங்கையில் இருந்து சமீப காலமாக அதிக அளவு கடத்தல் தங்கம் நாட்டுப் படகுகளில் தனுஷ்கோடி வழியாக தமிழகத்திற்குள் கடத்தி வரப்படுகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் திருச்சி மத்திய நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகளுக்கு நேற்றிரவு தலைமன்னாரில் இருந்து கடல் வழியாக நாட்டுப்படகில் ராமேஸ்வரம் கடற்றொழில் துறைமுக கடற்கரைக்கு கடத்தல் தங்கம் கடத்தி வரப்படுவதாக இரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து மத்திய நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறையினர் ராமேஸ்வரம் சுங்கத்துறை அதிகாரிகளுடன் இணைந்து ராமேஸ்வரம் கடற்கரை பகுதியில் துப்பாக்கியுடன் மறைந்திருந்தனர்.
அப்போது சந்தேகத்திற்கு இடமான முறையில் ராமேஸ்வரம் கடற்றொழில் துறைமுகம் அருகே வந்து நின்ற படகில் இருந்து மர்ம நபர் ஒருவர் தங்கக் கட்டிகள் கொண்ட பொதியை கரையில் நின்று கொண்டிருந்த நபரிடம் கொடுத்து விட்டு மீண்டும் படகில் புறப்பட்டு சென்றார்.
கடத்தல் தங்க கட்டிகளை பெற்றுக்கொண்ட நபர் இரு சக்கர வாகனத்தில் அதை எடுத்துக் கொண்டு ராமேஸ்வரம் அடுத்த தங்கச்சி மடம் தர்கா பேருந்து தரிப்பிடம் அருகே சென்று கொண்டிருக்கும் போது அவரை பின் தொடர்ந்து சுங்கத்துறை அதிகாரிகள் வருவதை அறிந்த அந்த நபர் இருசக்கர வாகனத்தை அவ்வழியாக சென்ற முச்சக்கர வண்டியில் மோதி விட்டு தப்பிக்க முயன்றுள்ளார்.
அதிகாரிகள் அவரை மடக்கிப் பிடிக்க முயன்ற போது அதிகாரியை தள்ளிவிட்டு விட்டு இரு சக்கர வாகனத்தை போட்டுவிட்டு தப்பி சென்றார்.பின்னர் இருசக்கர வாகனத்தை சோதனை செய்த போது வாகனத்தின் முன் பகுதியில் உள்ள பையில் தங்க கட்டிகள் இருந்தது.
தங்க கட்டிகளை பறிமுதல் செய்து அதிகாரிகள் ராமேஸ்வரம் சுங்கத்துறை அலுவலகத்திற்கு எடுத்து வந்து எடை போட்டு பார்த்ததில் அதில் சுமார் 7.70 கிலோ தங்கம் இருந்தது தெரியவந்தது.
சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய முதற்கட்ட விசாரணையில் கடத்தல் தங்கத்தை விட்டு சென்ற நபர் தங்கச்சிமடத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளதாகவும் அவரை தீவிரமாக தேடி வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு இந்திய மதிப்பில் சுமார் 4.50 கோடி ரூபாய் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடத்தல் தங்கம் யாருக்காக கொண்டு வரப்பட்டது என்பது குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.
அத்துடன் பறிமுதல் செய்யப்பட்ட தங்கம் திருச்சியில் உள்ள மத்திய சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவு தலைமை அலுவலகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.