ரஷ்ய இராணுவத்தில் வலுக்கட்டாயமாக இணைக்கப்பட்ட உறவுகளை மீட்டுத்தாருங்கள் : ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டோருக்கு மகஜர்
வலுக்கட்டாயமாக ரஷ்ய இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ள தமது உறவுகளை உடன் மீட்டுத்தருமாறு, பாதிக்கப்பட்டவர்கள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கு மகஜர் வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளபோதும் ரஷ்ய தூதரகம் அவர்களின் மகஜரை பெற்றுக்கொள்வதற்கு மறுப்புத் தெரிவித்துள்ளது.
ரஷ்யப் படையில் வலுக்கட்டாயமாகச் சேர்க்கப்பட்டவர்களின் உறவினர்கள் கையளித்துள்ள மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
பிரான்ஸ் மற்றும் பெல்ஜியம் ஆகிய நாடுகளுக்குச் செல்வதற்காக எமது உறவினர்கள் முகவர் ஊடாக பணம் செலுத்தி கடந்த மாதம் பயணமாகியிருந்தனர். அவர்களை கொழும்பு கட்டுநாயக்கவிலிருந்து ரஷ்யாவுக்கு கொண்டு செல்வதாகவும் பின்னர் அங்கிருந்து ஐரோப்பியாவுக்கு அழைத்துச் செல்வதாகவும் உறுதியளிக்கப்பட்டது.
அதற்கு அமைவாக, அவர்களுக்கு 60இலட்சம் முதல் 70இலட்சம் வரையிலான பணம் வழங்கப்பட்டுள்ளது. எனினும் எமது உறவினர்கள் ரஷ்ய விமான நிலையத்தில் இருந்து ரஷ்யாவுக்குள் அழைத்துச் செல்லப்பட்டு பின்னர் அவர்களுக்கு இராணுவப்பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
15நாட்கள் பயிற்சியின் பின்னர் அவர்கள் உக்ரேனுக்கு எதிரான போருக்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளனர். இந்த நிலையில் ஐரோப்பாவிற்கு அழைத்துச் செல்வதாக பணம்பெற்றுக்கொண்ட முகவர்களுடன் தொடர்புகளைக் கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
ஆகவே, தற்போதும் போர் உக்கிரமாக நடைபெற்று வருவதால் அவர்களின் உயிர்களைப் பாதுகாத்து எமது உறவுகளை பத்திரமாக மீட்டுத்தருமாறு கேட்டுக்கொள்கின்றோம் என்றுள்ளது. மிதுர்ஷன், பகிரதன், பாலச்சந்திரன்,பிரதாப், சிவாஸ் ஆகியோரே ரஷ்ய இராணுவத்தில் பலவந்தமாக இணைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.