தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை: ஜனாதிபதி வெளிப்படுத்திய தகவல்
தமிழ் அரசியல் கைதிகளை பிணையில் விடுதலைச் செய்ய முடியுமா என்பது தொடர்பில் ஆராய்ந்து அதனை செயற்படுத்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க விரும்பம் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியுடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராசமாணிக்கம் இதனை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
“ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் போது, எதிர்காலத்தில் புதிய அரசியலமைப்பு மூலம் அரசியல் தீர்வு, அதிகாரப் பகிர்வு மற்றும் காணாமல் போனவர்கள், காணிப் பிரச்சினை, இராணுவ முகாம்களை அகற்றுவது குறித்து கலந்துரையாடினோம்.
மேலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் நிலைப்பாடு குறித்தும் கலந்துரையாடியிருந்தோம். வடக்கு, கிழக்கில் அதிகபட்ச அதிகாரப் பகிர்வைக் கோரியுள்ளோம்.
எதிர்காலத்தில் இது தொடர்பில் விரிவாக கலந்துரையாடலாம் என ஜனாதிபதி எங்களிடம் கூறினார்.
அத்துடன், இனவாதத்தை இல்லாதொழிக்க பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ஒரு தேவையாகப் பயன்படுத்தினால் தவிர, அதைப் பயன்படுத்த விரும்பவில்லை என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
மேலும், அரசியல் கைதிகளை பிணையில் விடுவிக்க முடியுமா என்பதைக் கண்டறிந்து அதைச் செய்ய ஜனாதிபதி விரும்பம் கொண்டுள்ளதாக” நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் குறிப்பிட்டுள்ளார்.