தமிழரசுக் கட்சிக்கு அரசில் இடமில்லை; அமைச்சுப் பதவிகளும் இல்லை
இலங்கைத் தமிழரசு கட்சி உறுப்பினர்கள் அநுர அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளை பெறுவார்கள் என்ற தகவல்களை தேசிய மக்கள் சக்தி மறுத்துள்ளது.
அவ்வாறாக தமிழரசுக் கட்சியுடன் தமது கட்சி இதுவரையில் எந்தவொரு உத்தியோகபூர்வ கலந்துரையயாடலையும் நடத்தவில்லை என்றும், அவ்வாறான தேவை தமக்கு கிடையாது என்றும் தேசிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் வைத்தியர் நிஹால் அபேசிங்க தெரிவித்துள்ளதாக டெய்லிமிரர் செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கைத் தமிழரசு கட்சிக்கும் அரசாங்கத்திற்கும் இடையே இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளதாகவும், இதன்படி புதிய அரசாங்கத்தில் எம்.ஏ.சுமந்திரனுக்கு வெளிவிவகார அமைச்சுப் பதவி வழங்கப்படவுள்ளதாகவும் ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் பிவித்துறு ஹெல உறுமய கட்சியின் தலைவரான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்திருந்தார்.
இவ்வாறான நிலைமையிலேயே தேசிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் அதனை நிரகரித்து கருத்து வெளியிட்டுள்ளார்.
தமிழரசுக் கட்சியின் ஆதரவை பெற்றுக்கொள்வதற்காக எந்தவொரு பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை என்றும், சகல மாவட்டங்களிலும் தமது வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளதால், வேறு கட்சிகளின் உதவிகளை பெற்றுக்கொள்ள தமக்கு அவசியம் கிடையாது என்றும் வைத்தியர் நிஹால் அபேசிங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் கருத்து தெரிவித்திருந்த சுமந்திரன், அரசாங்கம் தமக்கு அமைச்சுப் பொறுப்பை வழங்க முன்வந்தால் அதனை பரிசீலிக்க தயார் என்று குறிப்பிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.