ஸ்டார்லிங்க் முன்பதிவுகள் ஆரம்பம்; பயன்மிக்க புதிய இணையச் சேவை
இலங்கையில் உள்ள மக்கள் 09 அமெரிக்க டொலர்களுக்கு ஸ்டார்லிங்க் (Starlink) இணையச் சேவையை முன்பதிவு செய்ய முடியும் என்பதுடன் இந்த முன்பதிவு தொகையை முழுமையாக மீளப் பெற்றுக் கொள்ளவும் முடியும்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் ஸ்டார்லிங்க் (Starlink) இணையச் சேவையின் தலைவர் எலான் மஸ்க் ஆகியோருக்கு இடையில் அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இந்த இணைய சேவை தற்போது முன்பதிவை ஆரம்பித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சர்வதேச விவகாரங்களுக்கான பணிப்பாளர் டினூக் கொலம்பகே தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இருப்பினும், இலங்கையில் உள்ள தொழில்நுட்ப தொழில்முனைவோருடன் ஜனாதிபதி கலந்துரையாடுவதற்கு முன்னரே, இலங்கையில் ஸ்டார்லிங்க் (Starlink) இணையச் சேவையின் முன்பதிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிலர் தெரிவிக்கின்றனர்.
ஸ்டார்லிங்க் (Starlink) செயற்கைக்கோள் இணைய சேவையை இலங்கையில் ஆரம்பிப்பதற்கு, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அழைப்பின் பெயரில் எலோன் மஸ்க் இந்த வருடம் இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக கூறப்பட்டது.
10வது உலக நீர் உச்சி மாநாட்டின் உயர்மட்ட அமர்விற்காக இந்தோனேசியா சென்றிருந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அங்கு எலான் மஸ்க்கை சந்தித்து புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, செயற்கை நுண்ணறிவு (யுஐ) மற்றும் உலக அரசியல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடியிருந்தார்.
இதன்போது, ஸ்டார்லிங்க் இணைய சேவை செயன்முறையில் இணைவதற்கான விண்ணப்ப செயல்முறையை விரைவுபடுத்துவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஒப்புக்கொண்டதுடன், இலங்கையின் கிராமங்களில் கல்வியை அபிவிருத்தி செய்வதற்கு இவ்வாறான இணைய சேவை உதவியாக அமையும் எனவும் தெரிவித்திருந்தார்.
பயன்பாடு
ஸ்டார்லிங்க் (Starlink) இணையச் சேவையை பயன்படுத்துவதனூடாக,
பின்னடைந்த பிரதேசங்களுக்கு இணைய வசதிகளை பிரச்சினையின்றி வழங்க முடியும் என்பதுடன் சுற்றுலாத்துறை உட்பட பொருளாதாரத்திற்கு பயன்படும் பல துறைகளின் வளர்ச்சிக்கு இந்த சேவையானது உறுதுணையாக இருக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும் பாடசாலை மாணவர்களுக்கும் பொது மக்களுக்கும் சலுகைக் கட்டண முறைகளின் கீழ் இணைய வசதிகளை வழங்குவது குறித்தும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கவனம் செலுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.