தோட்ட கம்பனிகள் கூலிப்படைகள் அமைத்து தொழிலாளர்களை தாக்குகின்றன; சம்பளம் விடயத்தில் அரசாங்கம் தோல்வி
“தோட்ட கம்பனிகள் கூலிப்படைகள் அமைத்து தொழிலாளர்களை தாக்குகின்றன. இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றவர்களை கொண்டு கம்பனி கூலிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.”
- இவ்வாறு தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இரத்தினபுரி இங்கிரிய தும்பற தோட்டத்தில் கம்பனிகாரர்களால் தொழிலாளர் தாக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பில் பொலிஸ் நடவடிக்கை எடுக்கும்படி கிரியல்ல பொலிஸ் பொறுப்பதிகாரி சமிந்த பெரேராவுக்கு பணித்துள்ளேன்.
நான் கடுமையாக தலையிடும் வரை பொலிஸ் அசமந்தமாக இருந்தது. தாக்குதல் நடத்தியவர்களை இரண்டு நாட்கள் தேடிய பொலிஸ் தற்போது அவர்களை கைது செய்து சட்ட நடவடிக்கை எடுத்துள்ளது.
மறுபுறம், தோட்ட தொழிலாளர் சம்பளம் தொடர்பில் இந்த அரசு இந்த நிமிடம் வரை தோல்வி அடைந்து உள்ளது. நீங்களும், ஜனாதிபதியும் உங்கள் வர்த்தமானி ஆவண கடதாசியை தூக்கி காட்டி, கொட்டகலையில் “இதோ ரூ.1700/=” என்று சூளுரைத்தீர்கள்.
ஆனால், என்ன ஆனது? நீங்கள் சூளுரைத்து வாயை மூட முன் இங்கே கொழும்பில், கம்பனிகாரர்கள் “முடியவே முடியாது” என்று கூறி நீதிமன்றத்துக்கு போகிறார்கள். கடந்த 5 வருடங்களாக “இதோ, அதோ, சம்பளம் உயர்வு கிடைக்கிறது” என்று சொல்லி, இது இழுபட்டது. இனியும் இழுபடதான் போகிறது.
தோட்டத்துறையில் “சிஸ்டம் சேஞ்ச்” என்ற முறை மாற்றம் செய்யாமல் அங்கே நிரந்தர தீர்வு ஒருபோதும் காண முடியாது. தோட்டங்களில் தினக்கூலி முறை ஒழிக்கப்பட வேண்டும்.” என்றார்.
“தொழிலாளர் மீதான தாக்குதல் நடத்த கம்பனிகள் சுயேட்சை ஓய்வு திட்டத்தில் இராணுவத்தில் இருந்து வெளியேறும் முன்னாள் படை வீரர்களை கொண்டு கூலிபடைகள அமைத்துள்ளார்கள்.
அந்த கூலிப்படைகள் தொழிலாளர்களின் மீது வன்முறை பிரயோகம் செய்து தாக்குகின்றன. இரத்தினபுரி இங்கிரிய தும்பரை தோட்டம், கிரியெல்ல போலிஸ் பிரிவில் இந்த சம்பவம் நேற்று முதல் நாள் நடந்துள்ளது.
இது பற்றி எங்கள் கட்சியின் இரத்தினபுரி மாவட்ட பிரதான அமைப்பாளர் சந்திரகுமார் எனது கவனத்துக்கு நேற்று கொண்டு வந்தார். உடனடியாக நான் கிரியல்ல போலிஸ் பொறுப்பதிகாரி சமிந்த பெரேராவுக்கு கடுமையாக இதுபற்றி பணிப்புரை விடுத்தேன். அதுவரை அசமந்தமாக இருந்த போலிஸ் அதன் பின் தாக்குதல் நடத்திய நபர்களை தேட தொடங்கியது.
இந்த விடயத்தில் நான் தலையிட்ட பிறகு, சம்பந்தபட்ட சந்தேகநபர்களின் முகவர்கள் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தாக்குதலுக்கு உள்ளான தொழிலாளி பெண்ணை தொடர்பு கொண்டு வழக்கை மீளப் பெறும் படி வலியுறுத்து உள்ளார்கள்.
நான் தொடர்ந்து நடவடிக்கை எடுத்த காரணத்தால் தற்போது சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கைக்கு உள்ளாகி உள்ளார்கள்.
இது தொடர்ந்து நடக்கிறது. கூலிப்படைகளை வைத்து தாக்குதல்கள் மாத்தளை, இரத்தினபுரி, கேகாலை, களுத்துறை ஆகிய மாவட்டங்களில் ஆங்காங்கே நடக்கிறது. ஒருபுறம் உரிய சம்பளம் இல்லை. மறுபுறம் வன்முறை. இது என்ன? அரசாங்கம் மலையக பெருந்தோட்ட மக்கள் தொடர்பில் தோல்வி அடைந்துள்ளது.