உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: விசாரணை ஆணைக்குழு தொடர்பில் ரணில் விசேட உரை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: விசாரணை ஆணைக்குழு தொடர்பில் ரணில் விசேட உரை

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரிகளை ஆராய நியமிக்கப்பட்ட இரு விசாரணை ஆணைக்குழுக்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விசேட உரையொன்றை ஆற்றவுள்ளார்.

முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புபட்ட விசாரணை அறிக்கையை வெளியிட்டிருந்தார்.

அதனைத் தொடர்ந்து ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு விசேட உரையாற்ற தீர்மானித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரவிக்கின்றன.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் புதிய விசாரணையை ஆரம்பிக்க தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நியமித்த ஷானி அபேசேகர மற்றும் ரவீ செனவிரத்ன ஆகிய இரு அதிகாரிகள், குறித்த தாக்குதல் தொடர்பிலான முன்னெச்சரிக்கைகளை புறக்கணித்தமையால் பொறுப்புக்கூற வேண்டும் என கம்மன்பில தெரிவித்தார்.

இதேவேளை, தாக்குதல் இடம்பெறபோவதாக வழங்கப்பட்டிருந்த முன்னெச்சரிக்கைகள் தொடர்பில் புலனாய்வுப்பிரிவு மேற்கொண்ட நடவடிக்கைகளை ஆராய ரணில் விக்கிரமசிங்க மூலம் நியமிக்கப்பட்ட குழுவின் காரணிகளையும் கம்மன்பில வெளிப்படுத்தியிருந்தார்.

ஓய்வுபெற்ற நீதிபதி ஜானகீ அல்விஸின் தலைமையிலான இந்தக் குழுவை இவ்வருட ஆரம்பத்தில் ரணில் விக்கிரமசிங்க நியமித்தமைக்கான காரணம் ஷானி மற்றும் ரவீ செனவிரத்னவுக்கு எதிரான அரசியல் பழிவாங்கலாக இருக்கலாம் என நம்புவதாகவும் இவ்வருட ஆரம்பத்தில் குழு நியமிக்கப்பட்டமை தொடர்பில் சந்தேகங்கள் எழுந்துள்ளதாகவும் மல்கம் ரஞ்சித் கர்தினால் ஆண்டகை கருத்து வெளியிட்டார்.

மேலும், ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி பதவியை இழக்க ஒரு வாரத்திற்கு முன்னரே இந்த விசாரணை அறிக்கைகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், அநுர அரசாங்கம் மீது குற்றம் சுமத்த விரும்பாமல் ரணில் விக்கிரமசிங்க இந்த அறிக்கைகளை வெளிப்படுத்தாமல் இருந்திருக்கலாம் எனவும் உதய கம்மன்பில சுட்டிக்காட்டியிருந்தார்.

CATEGORIES
Share This