சையத் ஹஷேம் சஃபிதீன் கொல்லப்பட்டார்; இஸ்ரேல் உறுதிப்படுத்தியது

சையத் ஹஷேம் சஃபிதீன் கொல்லப்பட்டார்; இஸ்ரேல் உறுதிப்படுத்தியது

ஹிஸ்புல்லாவின் தலைவரான ஹசன் நஸ்ரல்லாவின் வாரிசான சையத் ஹஷேம் சஃபிதீன் கொல்லப்பட்டதை இஸ்ரேல் செவ்வாயன்று (அக் 22) உறுதிப்படுத்தியது.

மூன்று வாரங்களுக்கு முன்பு பெய்ரூட்டின் தெற்குப் பகுதியில் நடந்த தாக்குதலில் சஃபிதீன் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. இது அவரது மரணத்தின் முதல் உறுதிப்படுத்தல் ஆகும்.

ஈரான் ஆதரவு பெற்ற லெபனான் போராளிக் குழுவை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா கடந்த மாதம் கொல்லப்பட்டார்.

“நாங்கள் நஸ்ரல்லா உள்ளிட்ட ஹிஸ்புல்லாவின் மூத்த தலைவர்களை கொன்றுவிட்டோம். இஸ்ரேலியர்களிள் பாதுகாப்பை அச்சுறுத்தும் எவரையும் நாங்கள் விடமாட்டோம்” என இஸ்ரேலிய இராணுவத் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் ஹெர்சி ஹலேவி அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

யார் இந்த சையத் ஹாஷிம் சஃபிதீன்?

சையத் ஹஷேம் சஃபிதீன் நஸ்ரல்லாவின் உறவினர். அவர் ஹிஸ்புல்லாவின் ஜிஹாத் பேரவைக்கு நியமிக்கப்பட்டார், இது குழுவின் இராணுவ நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான பிரிவாகும்.

அத்துடன், போராளிக் குழுவின் நிதி மற்றும் நிர்வாக விவகாரங்களை மேற்பார்வையிடும்.

செப்டம்பர் 27 அன்று இஸ்ரேலால் நஸ்ரல்லா படுகொலை செய்யப்பட்டதில் இருந்து ஈரான் ஆதரவு இயக்கத்தை அதன் துணை பொதுச்செயலாளர் நைம் காசிமுடன் இணைந்து நடத்தி வருகிறார்.

2017 ஆம் ஆண்டில், அமெரிக்க வெளியுறவுத்துறை அவரை உலகளாவிய பயங்கரவாதியாக அறிவித்திருந்தது.

கடந்த ஆண்டில், இஸ்ரேலுடனான உக்கிரமான பகைமைகளுக்கு மத்தியில், ஹிஸ்புல்லா என்ற போராளிக் குழுவுக்காகப் பேசும் முக்கியப் பாத்திரத்தை சஃபிதீன் ஏற்றுக்கொண்டார்.

இந்த நேரத்தில், பாதுகாப்பு காரணங்களுக்காக நஸ்ரல்லாவிற்கு பதிலாக சஃபிதீன் முக்கிய உரைகளை ஆற்றியிருந்தார்.

ஒக்டோபர் 7, 2023 அன்று தெற்கு இஸ்ரேல் மீது ஹமாஸின் தாக்குதலால் ஏற்பட்ட காசா போருக்குப் பின்னர், ஹிஸ்புல்லாவிற்கும் இஸ்ரேலுக்கும் இடையே பெரும் போர் வெடித்தது.

இதனையடுத்து சையத் ஹஷேம் சஃபிதீன் ஒரு பொதுவில் நிலைமை தொடர்பில் உரையாற்றிய முதல் ஹிஸ்புல்லா அமைப்பின் அதிகாரி ஆவார்.

தாக்குதலுக்கு மறுநாள் பெய்ரூட்டின் தெற்கு புறநகர்ப் பகுதிகளில் நடைபெற்ற பேரணியில் உரையாற்றிய சஃபிதீன், ஹிஸ்புல்லாவின் “துப்பாக்கிகளும் எங்கள் ஏவுகணைகளும் உங்களுடன் (ஹமாஸ்) உள்ளன… எங்களிடம் உள்ள அனைத்தும் உங்களுடன் உள்ளன” என்று அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
Share This