ஈரான் மீதான தாக்குதல் மிகக் கொடியதாக இருக்கும்; இஸ்ரேல் எச்சரிக்கை – அமெரிக்கா அக்கறை

ஈரான் மீதான தாக்குதல் மிகக் கொடியதாக இருக்கும்; இஸ்ரேல் எச்சரிக்கை – அமெரிக்கா அக்கறை

ஈரான் மேற்கொண்ட ஏவுகணை தாக்குலுக்கு தனது நாட்டின் பதிலடி மிகக் கொடியதாகவும், துல்லியமாகவும் இருக்கும் என்று இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலன்ட் தெரிவித்துள்ளார்.

“எங்களின் தாக்குதல் ஆபத்தானது, துல்லியமானது, எல்லாவற்றிற்கும் மேலாக ஆச்சரியமாக இருக்கும்” என்று படையினர் மத்தியில் உரையாற்றி அவர் தெரிவித்துள்ளார்.

“எப்படி நடந்தது என்று அவர்களுக்குப் புரியாது. “எங்களைத் தாக்குபவர்கள் பாதிக்கப்படுவார்கள், அதற்குரிய விலையைக் கொடுப்பார்கள்” என்று யோவ் கேலன்ட் தெரிவித்துள்ளார்.

லெபனான் போராளிக் குழுவான ஹிஸ்புல்லாவின் தலைவரான ஹசன் நஸ்ரல்லாவை கொன்றதற்கு பதிலடியாக, ஒக்டோபர் முதலாம் திகதி ஈரான் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியிருந்தது.

இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளது. இது குறித்து அமெரிக்காவுடன் இஸ்ரேல் தலைவர் பேசிவருவதாகவும் சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

அமெரிக்காவுடன் இஸ்ரேல் பேச்சுவார்த்தை

ஈரான் மீதாக தாக்குதல் தொடர்பில் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுடன் தொலைபேசி வாயிலாக பேசியுள்ளது. சுமார் 30 நிமிடங்கள் வரை இந்த கலந்துரையாடல் நீடித்துள்ளது.

இந்த கலந்துரையாடல் மிகவும் பயனுள்ளதாக இருந்தது என வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் இரு நாட்டு தலைவர்களும் பல விடயங்களில் தங்கள் கருத்து வேறுபாடுகள் குறித்து வெளிப்படைத்தன்மையுடன் பேசியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஈரான் மேற்கொண்ட தாக்குதலை அமெரிக்க ஜனாதிபதி பைடன் கண்டித்துள்ளார். ஹிஸ்புல்லாவுக்கு எதிராக இஸ்ரேல் தன்னை தற்காத்துக் கொள்ளும் உரிமையையும் பைடன் உறுதிப்படுத்தியுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

ஹிஸ்புல்லாவிற்கு எதிரான இஸ்ரேலின் நடவடிக்கையின் போது லெபனானில் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை குறைக்குமாறு நெதன்யாகுவை பைடன் வலியுறுத்தியுள்ளார்.

லெபனான், காசா மீது அமெரிக்கா அக்கறை

லெபனானில், காசா போன்ற இராணுவ நடவடிக்கைகளைத் தவிர்க்குமாறு அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர் தனி அறிக்கை ஒன்றின் ஊடாக இஸ்ரேலை வலியுறுத்தியுள்ளார்.

“லெபனானில் காசா போன்று தோற்றமளிக்கும் எந்த விதமான இராணுவ நடவடிக்கையும் இருக்கக் கூடாது என்பதை நான் தெளிவாகக் கூறுகிறேன்,” என்று அவர் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இஸ்ரேலியப் படைகள் தங்கள் தாக்குதல்களை விரிவுபடுத்தியுள்ள வடக்கு காசாவின் மனிதாபிமான நிலைமை குறித்து அமெரிக்கா “அக்கறை கொண்டுள்ளது.

“காசா முழுவதிலும் உள்ள மனிதாபிமான நிலைமை குறித்து நாங்கள் நம்பமுடியாத அளவிற்கு அக்கறை கொண்டுள்ளோம்.

குறிப்பாக வடக்கு காசாவில் உள்ள மனிதாபிமான நிலைமை குறித்து அக்கறை கொண்டுள்ளோம்” என்று மில்லர் மேலும் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
Share This