ஈரானின் அணுசக்தி தளங்களை தாக்கினால் பதிலடி மோசமாக இருக்கும்: இஸ்ரேலுக்கு அமெரிக்கா எச்சரிக்கை
ஈரான் நாட்டின் அணுசக்தி தளங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தினால் ஈரானின் பதிலடியில் இருந்து இஸ்ரேலை பாதுகாக்க முடியாது என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஈரானின் ஆதரவு பெற்ற ஹமாஸ், ஹிஸ்புல்லாக்களின் முக்கியத் தலைவர்களை இஸ்ரேல் கொன்றதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, கடந்த முதலாம் திகதி இதுவரை இல்லாத வகையில் இஸ்ரேல் மீது 180 சக்திவாய்ந்த ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்குதல் நடத்தியது.
இந்த ஏவுகணைகளை அமெரிக்காவின் ஆதரவுடன் வழிமறித்து தாக்கியதாக இஸ்ரேலும், 90 சதவிகித ஏவுகணைகள் இலக்கை துல்லியமாக தாக்கியதாக ஈரானும் அறிவித்திருந்தது.
ஈரானின் தாக்குதலுக்கு கடுமையான பதிலடி கொடுக்க வகையில், அந்நாட்டின் எண்ணெய் ஆலைகள், அணுசக்தி தளங்கள் உள்ளிட்ட கட்டமைப்பை தாக்குவதற்கான திட்டத்தை இஸ்ரேல் வகுத்து வருகின்றது.
இந்த நிலையில், ஈரானின் அணுசக்தி தளத்தை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் ஈரானின் பதில் தாக்குதலில் இருந்து இஸ்ரேலை பாதுகாக்க அமெரிக்கா உதவாது என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது.
இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் வழங்க மாட்டோம் என்று அறிவித்த பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான், பிற நாடுகளுக்கும் ஆயுதத் தடை விதிக்க கடந்த வாரம் அழைப்பு விடுத்தார்.
இதற்கு கண்டனம் தெரிவித்த இஸ்ரேல் பிரதமர், மேற்கத்திய நாடுகளின் ஆதரவு இல்லாமலேயே போரில் வெற்றி பெறுவோம் எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.