காற்றாலை மின் உற்பத்தி திட்டம்: ஆட்சி மாற்றத்தால் அதானி குழுமத்திற்கு பெரும் சவால்
வடமாகாணம் மன்னார் காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தை அதானி நிறுவனத்திற்கு வழங்கியுள்ளமை தற்போது வரை பேசு பொருளாகவே காணப்படுகின்றது.
மன்னாரிலும், பூநகரியிலும் மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி திட்டமொன்றையும், மின் விநியோகக் கட்டமைப்பொன்றையும் உருவாக்கும் பணியை இந்தியாவின் அதானி குழுமம் முன்னெடுத்து வருகின்றது.
இந்த நிலையில் அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான புதிய அரசாங்கம் இந்தியாவின் அதானி குழுமத்துடனான கற்றாலை மின் உற்பத்தி ஒப்பந்தத்தை மீளாய்வு செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்த அறிவிப்பானது அயல் நாடுகளில் இந்திய முதலீட்டு விரிவாக்கத்துக்கு ஏற்பட்டுள்ள புதியதொரு தடையாக உள்ளது.
மின்சார கட்டணங்களை ஓரளவு குறைக்கும் நோக்கில் ரணில் அரசாங்கம் அனுமதியளித்தமை பாராதூரமான விவகாரம் என வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் சுட்டிக்காட்டியிருந்தார்.
எதிர்வரும் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் புதிய அரசாங்கம் இதற்கு புதிய தோற்றத்தை அளிக்கும் என்றும் கூறினார்.
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க பிரச்சாரங்களின் போதும் கற்றாலை மின் ஒப்பந்தத்தை மீளாய்வு செய்வதற்கான நடவடிக்கை எடுப்பதாக கூறியிருந்தார்.
இத் திட்டத்தை இலங்கையின் எரிசக்தி இறையாண்மைக்கு அச்சுறுத்தலாக அமையும் என்று அநுரா கூறியதுடன் அதனை இரத்து செய்வதாகவும் உறுதியளித்திருந்தார்.
ஆசியாவின் இரண்டாவது பெரிய பணக்காரர் என்ற பெருமையுடைய அதானி குழுமம் இலங்கைத் தீவில் பல உட்கட்டமைப்பு திட்டங்களை நிறுவ எதிர்பார்க்கும் நிலையில், கற்றாலை மின் உற்பத்தி ஒப்பந்தத்திற்கான இத் தடை கெளதம் அதானியின் இலட்சியங்களுக்கு சவாலாக அமையும் என அவதானிகள் கருதுகின்றனர்.