நாளை கிழக்கு மாகாணம் முழுவதும் வெள்ளைக் கொடி; சம்பந்தனின் இறுதிக் கிரியை தொடர்பான அறிக்கை

நாளை கிழக்கு மாகாணம் முழுவதும் வெள்ளைக் கொடி; சம்பந்தனின் இறுதிக் கிரியை தொடர்பான அறிக்கை

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், முன்னாள் எதிர்க்கட்சி தலைவருமான இரா. சம்பந்தனின் இறுதிக்கிரியைகள் நாளை ஞாயிற்றுக்கிழமை திருகோணமலையில் நடைபெறவுள்ளதுடன், அதில் இலங்கையின் அரசியல் பிரமுகர்களும், வெளிநாட்டு முக்கிய அரசியல்வாதிகளும் கலந்து கொள்ள உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

அவரது இறுதிக்கிரியை நடைபெறும் போது, கிழக்கின் சகல பிரதேசங்களிலும் வெள்ளைக்கொடியை பறக்கவிட்டு அவருக்கு அஞ்சலி செலுத்த இலங்கையர்கள் அதிலும் குறிப்பாக கிழக்கு மாகாண மக்கள் முன்வர வேண்டும் என ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் பொருளாளரும், கொழும்பு மாநகர சபை முன்னாள் உறுப்பினருமான ஐ.ஏ. கலீலுர் ரஹ்மான் அறிக்கையொன்றினூடாக கேட்டுக்கொண்டுள்ளார்.

அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

“தமிழ் மக்களுக்கும் முஸ்லிம் மக்களுக்குமிடையிலான உறவின் இணைப்பு பாலமாக விளங்கிய மூத்த அரசியல் ஆளுமை இரா. சம்பந்தனின் மறைவு தமிழ் பேசும் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் ஆழ்ந்த கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் புரையோடிப் போயுள்ள தேசிய இனப் பிரச்சினையில் சிறுபான்மைச் சமூகங்களுக்கும் உச்சபட்ச அரசியல் தீர்வை பெற்றுக் கொடுப்பதற்காக தனது வாழ்நாள் பூராவும் அயராது பாடுபட்ட அரசியல் ஆளுமையான சம்பந்தனுக்கு அஞ்சலி செலுத்த இலங்கையர்களான நாம் கடமைப்பட்டுள்ளோம்.

அன்னாரின் பிரிவுத் துயரால் வருந்தும் குடும்பத்தினருக்கும் திருகோணமலை மக்களுக்கும் தமிழரசுக் கட்சிக்கும், தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்ளும் இந்த சந்தர்ப்பத்தில் அவரது மக்கள் பணியயையும், அரசியல் சேவைகளையும் கௌரவிக்கும் விதமாக நல்லிணக்கத்தின் வெளிப்பாடாக அவரது இறுதிக்கிரியை இடம்பெறும் நாளை ஞாயிற்றுக்கிழமை கிழக்கின் சகல பிரதேசங்களிலும் வெள்ளைக்கொடியை பறக்கவிட்டு அவருக்கு அஞ்சலி செலுத்த இலங்கையர்கள் அதிலும் குறிப்பாக கிழக்கு மாகாண மக்கள் முன்வர வேண்டும் என வலியுறுத்த விரும்புகிறேன்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
Share This