சம்பந்தனுக்கு கொழும்பில் வழங்கப்பட்ட வீடு; மீளப் பெற்றுக்கொள்ள அரசாங்கம் நடவடிக்கை

சம்பந்தனுக்கு கொழும்பில் வழங்கப்பட்ட வீடு; மீளப் பெற்றுக்கொள்ள அரசாங்கம் நடவடிக்கை

முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் தலைவருமான இரா.சம்பந்தனுக்கு வழங்கப்பட்ட கொழும்பு 7, மஹாகமசேகர மாவத்தையில் உள்ள உத்தியோகப்பூர்வ இல்லம் சுமார் மூன்று வருடங்களாகியும் இதுவரை அரசாங்கத்திடம் கையளிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த உத்தியோகப்பூர்வ இல்லம் அமைச்சரவையின் ஒப்புதலுடன் அவரது பயன்பாட்டிற்காக வழங்கப்பட்டது.

இந்த வீட்டை மீண்டும் அரசாங்கத்திடம் பெறுவதற்கு அந்த முடிவை மாற்றி புதிய அமைச்சரவை தீர்மானம் எடுக்கப்பட வேண்டும் என பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், நீதித்துறை மாகாண சபை, உள்ளூராட்சி மற்றும் தொழிலாளர் அமைச்சின் வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த உத்தியோகப்பூர்வ இல்லத்தை மீண்டும் அரசாங்கத்திடம் பெற்றுக்கொள்வதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை முன்னாள் பிரதம அமைச்சர் தினேஸ் குணவர்தனவிடம் அமைச்சு அண்மையில் கையளித்த போதிலும், ஆட்சி மாற்றத்துடன் அங்கீகாரம் நிறுத்தப்பட்டதாக அறிய முடிகிறது.

இந்நிலையில், புதிய பிரதம அமைச்சர் கலாநிதி ஹரிணி அமரசூரியவிடம் இதற்கான பத்திரத்தை கையளிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

2015ஆம் ஆண்டு எதிர்க்கட்சித் தலைவராக பதவியேற்றதன் பின்னர் சம்பந்தனுக்கு இந்த உத்தியோகப்பூர்வ இல்லம் வழங்கப்பட்டிருந்தது.

எனினும், 2018ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தில் மகிந்த ராஜபக்ச ஒக்டோபர் 26ஆம் திகதி முதல் 52 நாட்கள் பிரதமராக நியமிக்கப்பட்டார்.

எனினும், 52 நாட்களின் பின்னர் இரா.சம்பந்தன் மீண்டும் எதிர்க்கட்சி தலைவராக நியமிக்கப்பட்டதுடன், அப்போது முதல் குறித்த இல்லத்தில் தொடர்ந்தும் தங்கியிருக்க அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் நல்லாட்சி அரசாங்கத்தின்போது அப்போதைய காணி அமைச்சர் கயந்த கருணாதிலகவினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்தின் பிரகாரம், 2019 பெப்ரவரி 26 ஆம் திகதி எடுக்கப்பட்ட தீர்மானத்தின் படி, சம்பந்தன் இருக்கும் வரை அந்த வீட்டை பயன்படுத்த அனுமதிக்கப்பட்டார்.

இந்த உத்தியோகபூர்வ இல்லத்தின் நீர்க் கட்டணம், மின்சாரக் கட்டணம், தொலைபேசி கட்டணம், பராமரிப்புச் செலவுகள் என்பன அரசாங்கத்தினால் ஏற்கப்படுவதாகவும், இந்த உத்தியோகப்பூர்வ இல்லத்தின் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளும் ஊழியர்களின் சம்பளம் அரசாங்கத்தினால் செலுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

2017 ஆம் ஆண்டு அந்த வீட்டின் பழுது பார்க்கும் பணிக்காக மூன்று கோடியே ஐம்பது லட்சம் ரூபாய் செலவிடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரா.சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை இழந்து இறக்கும் வரை குறித்த உத்தியோகபூர்வ இல்லத்திலேயே வாழ்ந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
Share This